எல்லைப்புறங்களில் சிங்கள உத்தியோகத்தர்களை நியமிப்பதன் மூலம் சிங்களக் குடியேற்றத்திற்கு முயற்சி! சுட்டிக்காட்டும் சி.வி
வடக்கு கிழக்கு மாகாணத்தின் எல்லையோரக் கிராமங்களிலும் மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா அரசு சிங்கள உத்தியோகத்தர்களை நியமித்து வருகின்றது. இதன் மூலம் அப் பகுதி சிங்களமயமாகின்றது. இதனை சுட்டிக்காட்டியுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அந்த உத்தியோகத்தர்களை யாழ்ப்பாணத்தில் வந்து பணியாற்றுமாறும் கூறியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக பல சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது வடக்கு மாகாணத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு விவசாய போதனாசிரியர்களாக பெரும்பாலான சிங்கள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனை வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட தரப்பு எதிர்த்தபோது நியமனம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் வடக்கு மாகாணத்தின் எல்லை பகுதிகளில் சிங்கள உத்தியோகர்கள் நியமிக்கப்பட்டு வருவது மீண்டும் தமிழர்களை வேதனைக்கும் சினத்திற்கும் தள்ளியுள்ளது. சிங்கள மக்களை குயேற்றி வட்க்கு கிழக்கின் எல்லைகளை சிங்களவர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழர்கள் வாழும் எல்லைப் பகுதிகளில் சிங்கள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவதன் மூலம் அவர்கள் அங்கு குடியேறும் சூழல் ஏற்படுத்தப்படுகிறது.
இதனை தவிர்க்கும் முகமாக சிங்கள உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்து பணியாற்ற வடக்கு முதலமைச்சர் அழைத்துள்ளார். எல்லைக் கிராங்களில் சிங்களக் குடியேற்றத்தை தவிர்க்கவே அவர் இவ்வாறு அழைத்துள்ளார். இதேவேளை தமிழ்க் கிராமங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் சிங்கள அதிகாரிகளை நியமித்து சிங்கள மயப்படுத்தும் செயற்பாட்டை சிங்கள அரசு காலம் காலமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.