ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படம் ரிலீசாகும் அன்றே இணையதளங்களிலும் வெளியாகும் என்று தமிழ் ராக்கர்ஸ் அறிவித்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கான புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், புதிய டிரைலர் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது.
அந்த டிரைலரில், நிலம் – உனக்கு அதிகாரம், எங்களுக்கு வாழ்க்கை என்று ரஜினி பேசும் வசனங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், காலா படத்தை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ்ராக்கர்ஸ் அறிவித்துள்ளது.
தமிழ் படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் பைரசி இணையதளம், காலா படத்தை வெளியாகும் நாள் அன்றே வெளியிடுவோம் என்று அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பைரசி இணையதளங்களை கட்டுப்படுத்த தயாரிப்பாளர் சங்கம் முயற்சி எடுத்து வருவதாக கூறி வந்தாலும், அவ்வப்போது புதுப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி தான் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இன்று ஐதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விளம்பர நிகழ்ச்சி ஒன்று தூத்துக்குடி கலவரம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.