அமரா
நீ மீட்ட ஆனையிறவில் சுடப் பட்ட
செங்கால் நாரைகள் போல்
வன்னியெங்கும்
தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே.
என் கவிதையிலே நீ இருக்க
ஈழம் கதறியழும் நியாய மென்ன.
நீயோ முடங்கிய காலில்
மூண்டெரிந்த விடுதலைத் தீ.
தீவெட்டியாய் உன்னைச்
சுமந்து சென்ற தோழருக்கு
‘இத்தாவில்’ பகையிருட்டில்
வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா.
உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு.
களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல்
காலங்கள் ஊடே
என் கவிதை இனிச் சுமக்கட்டும்
அவனை ஆழப் புதைக்காதீர்
ஆலயங்கள் கட்டாதீர்.
நாளை மணலாற்றை மீட்டு
வாழ திரும்புகையில் நம் சனங்கள்
மசிரை விட்டுதுகள் தம்
மனம் நிறைந்த நாயகனை.
மணலாற்று அகதிகளின் புதையல்
ஆழப் புதைக்காதீர்.
http://ta.wikipedia.org/wiki/பால்ராஜ்