முள்ளிவாய்க்கால் உலகம் ஊன்றிப் பார்க்கும் இடம். தமிழ் இனம் தன் மாபெரும் இனப்படுகொலையை சந்தித்த நிலம். முள்ளிவாய்க்கால் என்பது தமிழ் இன விடுதலைக்கான, தமிழ் இனப்படுகொலையின் நீதியை வலியுறுத்தும் துடுப்பு. முள்ளிவாய்க்கால் மீண்டும் மீண்டும் நீதியை கோரும் என்பதையும் மீண்டும் மீண்டும் தமிழின இனவிடுதலையை வலியுறுத்தும் என்பதையும் முள்ளிவாய்க்கால் ஒன்பதாவது ஆண்டு இனப்படுகொலை நினைவு தினம் இந்த உலகத்திற்கே உணர்த்தி நிற்கிறது.
நேற்று தமிழர் தேசம் கண்ணீரில் தத்தளித்தது. சிந்திய குருதியை எண்ணி கொந்தளித்தது. முள்ளிவாய்க்கால் கோபம் குப்புளித்தது. தமிழர் தாயகமே அந்தக் கோரப்படுகொலையை எண்ணி சோகத்தை சுமந்திருந்தது. எவருடைய முகத்திலும் இயல்பில்லை. எல்லோருடை்ய முகங்களும் கறுத்துப் போயிருந்த நாள்.எல்லோருடைய முகங்களும் நீதியை அவாவித் துடித்த நாள். சில தமிழ் தலைவர்கள் முள்ளிவாய்க்காலிலும் சிரித்தபடி நின்றது வேறு கதை. அத்தோடு இன்றோ சிங்கள தேசத்தில் போர் வெற்றி தினம். இன்றோ சிங்கள அரசு எமை கொன்று குவித்ததை கொண்டாடி மகிழும் தினமாம்.
இன்றைய சிங்கள அரசு நல்லாட்சி வேடம் போடுகிறது. முள்ளிவாய்க்காலையும் மாவீரர் தினத்தையும் சிங்கள அரசின் அனுமதி வேண்டி நாங்கள் மேற்கொண்டதில்லை. எங்கள் மக்கள் 2010ஆம் ஆண்டிலேயே மகிந்த சிங்கள அரசின் கொடிய ஆட்சி நடந்தபோதே ஏதோ ஒரு வகையில் எல்லாவற்றையும் நினைவு கூர்ந்தார்கள். இன்று முள்ளிவாய்க்கால் நிகழ்வை நடாத்த அனுமதி தருவதைப்போல சிங்கள அரசு பாவனை செய்கிறது.
முதலில் நடந்தது தமிழ் இனப்படுகொலை என்றும் அதற்குரிய நீதியையும் சிங்கள அரசு அறிவிக்கட்டும் அப்போது நல்லாட்சி அரசென்கிறோம்.
எப்படி அறிவிக்கும்? முள்ளிவாய்க்காலை கொண்டாட அனுமதித்த மாதிரி ஒரு பாசாங்கு இங்கே. மறுபறம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை யுத்த வெற்றி தினமாக கொண்டாடுகிறது அரசு சிங்கள அரசு. நாங்களும் நீங்களும் வேறு வேறு நாடு. நாங்களும் நீங்களும் வேறு வேறு இனம் என்பதை இதைவிடவும் எப்படி வெளிக் காட்டுவது? வடக்கில் கண்ணீர்! தெற்கில் கொண்டாட்டம். இந்த நாடு இரண்டாகவே இருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன வேண்டும்?
சிங்கள அமைச்சர் ராஜித சேனாரத்தின போரில் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று தெரிவித்த கருத்தை தொடர்ந்து, சிங்கள தேசமே ஈழத் தமிழ் மக்கள்மீது இனவெறிப் போர் தொடுத்து நிற்கிறது. சமூக வலைத்தளங்களில் எல்லாம் இப்போது சிங்களக் காடையர்கள் நிறைந்துவிட்டனர். அவை முழுவதும் சிங்கள இனவெறி இராணுவத்தினர். 1983இல் கொழும்பில் தமிழர்களை வெட்டிக் கொன்ற சிங்களக் காடையர்கள் இன்று சமூக வலைத்தளங்களில்தான் உள்ளனர். வன்னியில் தமிழ் மக்களை கொன்றழித்த அதே சிங்கள இராணுவக் காடையர்கள் இன்று சமூக வலைத்தளங்களை ஊடுருவி உள்ளனர்.
தங்கள் உறவுகளுக்காக குரல் கொடுத்து, அவர்களின் நீதிக்காக கண்ணீர் விட்டு, விடுதலைக்காக கதறி அழும் எங்கள் உறவுகளை இந்தக் காடையர்கள் கொச்சைப்படுத்துகின்றனர். கிண்டல் அடிக்கின்றனர். உண்மையில் தமிழர்கள்மீது எப்போதும் மீள ஒரு இனப்படுகொலையை நடாத்த சிங்களவர் தயாராக இருக்கின்றனர் என்பதையே இவை காட்டுகின்றன. அதனால்தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி அவசியம் என்கிறோம். இனப்படுகொலை புரிந்தவர்களை தண்டித்தால்தான் இவர்கள் அஞ்சுவார்கள். அதுவே இவர்களை சீர் திருத்தும்.
சிங்கள காடையர்களும்சரி, அவர்களின் அரசும் சரி இன்னமும் திருந்துவதாய் இல்லை. இதன்காரணமாகவே இன்றும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டும் என்றும் தலைவர் பிரபாரகன் மீண்டும் வரவேண்டும் என்றும் ஈழத் தமிழ் மக்கள் கேட்கின்றனர். தலைவர் பிரபாகரனை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போதும் ஒரு தாய் அழைத்தமையை ஊடகங்களில் பார்த்திருக்கிறோம். இன்னொரு இனப்படுகொலையை நடாத்த சிங்களம் தயாராக இருப்பதன் காரணமாவே, ஈழத் தமிழர்களும் பிரபாகரனை அழைக்கின்றனர்.
ஆசிரியர்,
19.05.2018