தமிழக அரசை கலையுங்கள்! – கொதிக்கும் விஜயகாந்த்

0


”ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதைத் தவிர்க்காமல் தான்தோன்றித்தனமாகத் தமிழக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது” எனத் தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடி மாவட்ட கிராம மக்களின் போராட்டம் 100வது நாளை எட்டியிருக்கிறது. 100 நாள்களாகப் பணிகளுக்குச் செல்லாமல் வாழ்வாதாரத்துக்காகப் பல்வேறு கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிவருகின்றனர். தொடர்ந்து கிராம மக்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புக்கள், பொதுமக்கள், அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வந்தாலும், போராட்டத்துக்கு முடிவு எட்டவில்லை. மாறாகப் போராட்டத்தின் 100வது நாளான இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கண்டம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “பொதுமக்களின் உணர்வுகளைக் கண்டுகொள்ளாமல் இருந்த மாவட்ட ஆட்சியரும் அதிகாரிகளும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும், தமிழக அரசும், மத்திய அரசும் பொதுமக்களின் போராட்டத்தை உதாசீனப்படுத்தியதன் விளைவு இன்று 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இருந்தும் அமைதியான முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றபோது, ஆலைக்கு ஆதரவாகத் தமிழக அரசின் காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது. அமைதியான போராட்டம் கலவரமாக மாறியதுடன் இதனால் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. பொதுமக்களுக்குப் பாதிப்பு என்று தெரிந்தும் அந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகத் தமிழக அரசும், மத்திய அரசும் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மக்களின் உயிரும் உடைமைகளும்தான் முக்கியமே தவிர, மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டமும் வெற்றிபெற்றதாக இல்லை, எனவே மக்கள் விரும்பாத அந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக ஆளும் அ.தி.மு.க அரசும் மத்திய அரசும் தடைவிதித்து நிரந்தரமாக மூட வேண்டும். துப்பாக்கிச்சூடு கலவரத்தில் ஈடுபட்டுக் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி செய்துகொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதைத் தவிர்க்காமல் தமிழக அரசு தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதும், காலம் தாழ்த்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அ.தி.மு.க அரசும் மத்திய அரசும் இதில் முழுக்கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய அ.தி.மு.க அரசு கலைக்கப்பட வேண்டிய அரசு” என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.