தமிழர் தாயகத்தில் ஹற்றன் நஷினல் வங்கிக்கு மூடுவிழா?

0

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நாட்களில், இலங்கை அரசுமீது ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்ற அந்த தாக்குதலில் சுமார் 300 இணையங்கள் முடக்கப்பட்டன. அறிவார்ந்த ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதல் காலத்திற்கு ஏற்ற ஒரு போர் யுக்தி. இத்தகைய எளிமையான போராட்டங்களை செய்வதே இன்றைய காலத்தின் அவசியமாகும். தற்போது ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ஹற்றன் நஷினல் வங்கிக்கு எதிரான தாக்குதல் ஒன்று இவ்வாறே முன்னெடுக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் உள்ள ஹற்றன் நஷினல் வங்கி கிளையில் கடந்த மே 18 அன்று கொல்லப்பட்ட மக்களுக்காக நினைவஞ்சலி நடாத்தப்பட்டுள்ளது. இதனை முன்னெடுத்தார்கள் என்ற பெயரில் வங்கி உதவி முகாமையாளரும் ஊழியர் ஒருவரும் பணி நீக்கம் செய்த நிகழ்வு தமிழ் இளைஞர்களை கடும் கோபத்திற்கும் விசனத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. இந்த தகவல்கள் நேற்றைய தினம் சில இணைய ஊடகங்களில் வெளிவந்த நிலையில் இன்று ஹற்றன் நஷினல் வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் எங்கும் கடுமையான எதிர்ப்பு அலைகளும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஈழத்தில் களத்தில் இறங்கி ஈழ இளைஞர்கள் செயற்பட்ட வெற்றிகரமான யுத்தம் இது எனலாம். வெறுமனே சொல் வீரர்களாக இன்றி, செயல் வீரர்களாக ஈழ இளைஞர்கள் இன்று மாறினர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்தமைக்காக ஊழியர்களை வஞ்சித்த ஹற்றன் நஷினல் வங்கியில் கணக்குகள் எதற்கு என்று தீர்மானித்த ஈழ இளைஞர்கள் தமது கணக்குகளை மூடி வங்கிப் புத்தகத்தையும் தன்னியக்க வங்கி அட்டைகளையும் கிழித்தும் உடைத்தும் எறிந்திருப்பது ஹற்றன் நஷினல் வங்கியை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள – இலங்கை தனியார் வங்கி ஒன்றை அசைய வைத்த நிகழ்வு.

இப்போது அந்த வங்கி தன்னிலை விளக்கம் அழித்துள்ளது. தாம் எந்த ஒரு நிகழ்வையும் நடத்துவதில்லை என்றும் அதற்கு முகாமையின் அனுமதி தேவை என்றும் இனவாத ரீதியான ஊழியவர்களை பணி நீக்கவில்லை என்றும் கூறியுள்ளது. ஹற்றன் நஷினல் வங்கி தலைமையே, ஈழத் தமிழர்கள் இல்லை என்றால் உங்கள் வங்கி படுத்துறங்கிவிடும். உங்கள் வங்கியைப் பயன்படுத்தி உலகம் எங்கும் உள்ள ஈழத் தமிழர்கள் நிதி கொடுங்கள் வாங்கல் செய்கின்றனர். எல்லோரும் உங்களை நிராகரித்தால் கடையை நிரந்தரமாக மூட வேண்டும்.

தவிரவும், தைப்பொங்கல், தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்கும் நீங்கள் தமிழர் மண்ணில் வங்கி நடாத்துவதாக இருந்தால் முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் அதற்காக தமிழ் ஊழியர்கள் ஒரு துளி கண்ணீர் சிந்த அனுமதிக்க வேண்டும். உங்களைப் போன்ற நிறுவனங்கள் நடுநிலைவாதிகளாக காட்டுவது சந்தர்ப்பவாதமானது. போர் முடிந்த போது, மகிந்த ராஜபக்சவின் அரசியல் வெற்றி வசனங்களை மகுடவாக்கியம் ஆக்கிய வங்கிகள் மற்றும் நிறுவனங்களையும் நாம் அறிவோம். எங்களுக்கு நடுநிலமை நாடகம் வேண்டாம். இங்கு தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலையை அனைவரும் ஏற்க வேண்டும்.

அதற்கான நீதிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தமிழர் தாயகத்தில் உள்ள இத்தகைய வங்கிகள், அரச அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு இது ஒரு தக்க பாடமாகவும் உகந்த எச்சரிக்கையாகவும் அமையும் என்று நம்புகிறோம். ஹற்றன் நஷினல் வங்கி தன் தலையில் தானே மண்போட்டுக் கொண்டது. இனி அந்த வங்கி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். ஊழியர்களை மீள இணைக்க வேண்டும். அப்படி நிகழுாத பட்சத்தில் இந்த சரிவு நிலை தமிழர் தாயகத்தில் ஹற்றன் நஷினல் வங்கியை மூடிச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளும்.

ஈழத் தமிழர்களே! தமிழர் தாயகத்தில் ஹற்றன் நஷினல் வங்கிக்கு மூடுவிழாவா? அல்லது மன்னிப்பு கேட்கப் போகிறதா என்று பார்ப்போம். அதற்கான போராட்டத்தில் செயற்படுவோம்.

ஆசிரியர்,
25.05.2018

Leave A Reply

Your email address will not be published.