துணிவிருந்தால் வாருங்கள்! அமைச்சர் மனோவிற்கு சிவாஜிலிங்கம் பகிரங்க சவால்

0


துணிவிருந்தால் என்னுடன் விவாதத்திற்கு வருவீர்களா? நான் ரெடி நீங்கள் ரெடியா? என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், அமைச்சர் மனோ கணேசனிற்கு சவால் விடுத்துள்ளார்.

உங்களைப்பற்றி பேசுவது அரசியல் நாகரீகம் இல்லை, நீங்கள் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களில் ஒருவராக உள்ளீர்கள். உங்களை விமர்சித்தால் அது மலையக தமிழர்களை புண்படுத்தும் என பேசாது விடுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஒரு அரசியல் கோமாளி என அமைச்சர் மனோ கணேசன் கூறிய கருத்து தொடர்பாக இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசியல் நாகரீகம் தெரியாமல் அமைச்சர் மனோ கணேசன் பேசுவாராக இருந்தால், எப்படி நாடாளுமன்ற உறுப்பினரானார்?

மனோ கணேசன் அவர்களே தொடர்ந்து என்னை நீங்கள் சீண்டினால் நான் தொடர்ந்தும் பொறுமை காக்க மாட்டேன்.

மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது கூட இனப்படுகொலையின் அம்சம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து விட்டீர்கள், ஏணிகளாக இருந்து உங்களை ஏற்றிவிட்ட பிரபாகணேசன், வேலணை வேணியன் எங்கே?

என் கருத்திற்கு எதிர்க்கருத்து கூறுவது என்றால், அரசியல் நாகரிகத்தை பேணி பேசுங்கள். இல்லை என்றால் நானும் உங்கள் கடந்த காலத்தை தூசு தட்டுவேன்.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதே அரசியல் நாகரீகம். அந்த நாகரீகத்தை அறியாத அமைச்சர் மனோ கணேசன் தேவையற்ற வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி என்னை விமர்சித்துள்ளார்.

தமிழ் அல்லது சிங்கள மொழியில் எங்கு வேண்டுமானாலும் என்னுடன் விவாதம் நடத்த தயாரா என இந்த சந்தர்ப்பத்தில் நான் அமைச்சர் மனோ கணேசனிடம் கேட்கிறேன்?

அப்படி விவாதம் நடத்தினால் யார் அரசியல் கோமாளிகள் என்பதை மக்கள் நிச்சயமாக பார்ப்பார்கள். மேலும் அமைச்சர் மனோ கணேசனை அரசியல் நாகரீகத்திற்குள் நின்று நான் விமர்சிப்பதற்கு காரணம் மலையக மக்கள் மீதுள்ள மரியாதை மட்டுமே.

ஆனால் இதற்கு பின்னரும் அமைச்சர் மனோ கணேசன் வரம்பு மீறி பேசுவாராக இருந்தால் நாங்களும் வரம்புக்குள் நின்று கொண்டு அரசியல் நாகரீகத்தை பற்றி பேசுவதற்கு தயாராக இல்லை.

மனோகணேசன் எப்படி நாடாளுமன்ற உறுப்பினரானார்? முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் இருந்திருந்தால் அமைச்சர் மனோ கணேசனுக்கு என்ன கூறியிருப்பார்கள், என்பது பற்றியெல்லாம் நாங்களும் பேச வேண்டிய நிர்ப்பந்தம் வரும்.

அதேபோல் விக்கலீக்ஸ் ஆவணம் இன்றும் உள்ளது. அதில் சம்பந்தன் மற்றும் நான் சர்வதேச நீதி விசாரணை வேண்டும், படுகொலைகளுக்கு நீதி வேண்டும் என கேட்டிருப்பது கூறப்பட்டுள்ளது.

அதே விக்கிலீக்ஸ் ஆவணத்தில் சர்வதேச விசாரணை வேண்டாம் என அமைச்சர் மனோ கணேசன் கூறுவதும் உள்ளது.

ஆகவே படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டும் என கேட்பதற்கு துணிவற்ற அமைச்சர் மணோ கணேசன் எங்களை கோமாளி என்பது வேடிக்கை என சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.