தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதைக் கண்டித்து தஞ்சாவூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏற்பாட்டில் அனைத்துக் கட்சி கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
இதில் கண்டன உரையாற்றிய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடுவதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் ஆகியோரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. போராட்டம் நடத்திய பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து, அறவழியில் போராடினால் என்ன தவறு?. இதனை அனுமதித்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக உறுதிமொழி கொடுத்திருந்தால், இந்தப் போராட்டம் அமைதியாகவே முடிந்திருக்கும்.
போராடும் மக்களை பழித் தீர்க்க வேண்டும் என்ற வெறியோடுதான் முன்கூட்டியே வஜ்ரா வாகனம், கண்ணீர்ப் புகை குண்டுகளை காவல்துறையினர் கொண்டு வந்துள்ளார்கள். துப்பாக்கிச்சூடு நடத்தி மக்களைக் கொல்ல வேண்டும் என ஆட்சியாளர்கள் முன்கூட்டியே தீர்மானித்துவிட்டார்கள். இது எதிர்பாராமல் நிகழ்ந்த துயரம் அல்ல. கதிராமங்கலம், நெடுவாசல், தூத்துக்குடி என மக்கள் தங்களது வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக்கொள்ள எழுச்சியுடன் போராட்டங்கள் நடத்துவதை, மத்திய அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பிரதமர் மோடியை மகிழ்ச்சியடைய வைப்பதற்காகத்தான் தூத்துக்குடி மக்களை முதல்வர் பழனிசாமி பலி கொடுத்திருக்கிறார். இந்தச் சம்பவத்திற்காக முதல்வர் பழனிசாமியை மோடி பாராட்டுவார். துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸை அமித்ஷா பாராட்டக்கூடும். தூத்துக்குடி போலவே கதிராமங்கலம், காவிரிப் போராட்டங்களில் அடக்குமுறையை ஏவக்கூடும். இதனை எதிர்கொள்ள மக்கள் பெரும் எண்ணிக்கையில் போராட்டக் களத்திற்கு வர வேண்டும்” என்றார்.