தமிழீழத் தேச கட்டுமானம் உட்பட நான்கு முக்கிய விடயங்களை மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை நேரடியாக அமெரிக்காவில் கூட இருக்கின்றது.
தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை என ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திகழ்ந்து வரும் நிலையில், இதன் நேரடி அரசவை அமர்வு அமெரிக்காவின் பொஸ்ரன் பெருநகரில் இடம்பெற இருக்கின்றது.
தமிழீழத் தேசிய துக்க நாளாகிய மே-18 முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையினைத் தொடர்ந்து மே 19,20 ஆகிய நாட்களுக்கு அமர்வு இடம்பெற இருக்கின்றது
புலம்பெயர் நாடுகளில் அரசவை உறுப்பினர்களாக இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த நேரடி அமர்வில் பங்கெடுக்க இருப்பதோடு, மேலவை உறுப்பினர்கள், மதியுரைக்குழு உறுப்பினர்கள், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் உட்பட பல பன்னாட்டு பிரதிநிதிகளும் பங்கெடுக்கின்றனர்.
குறிப்பாக தென் சூடானின் பொதுவாக்கெடுப்பில் முக்கிய பங்காற்றியிருந்த திரு லாடு ஜடா குபெக் அவர்கள் இந்த அமர்வில் சிறப்பு அதிதியாக பங்கெடுக்கின்றார்.
இதேவேளை பன்னாட்டு நீதியியலில் புகழ்மிக்க சட்ட வல்லுனர்
பேராசிரியர் ஹீதர் ரயான் அவர்களும் பங்கெடுக்க இருக்கின்றார்.
தமிழ்த் தேசியப் போராட்டத்தின் நடப்பு நிலை உட்பட ஈழத் தமிழர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல சிக்கல்கள் குறித்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அமர்வில் பல தீர்மானங்கள் இயற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்க அமைச்சர்களின் முன்னேற்ற அறிக்கைகளும், ஆண்டு நிதிநிலை அறிக்கையும் அரசவையில் முன்வைக்கப்படும்.
இந்த அரசவை அமர்வில் நான்கு முக்கியத் தலைப்புகளில் கவனம் செலுத்தப்படும் தெரிவிக்கப்படுகின்றது.
1) சிறிலங்காவுக்குத் தரப்பட்ட கால நீட்டிப்பு முடிவடையும் 2019 மார்ச்சு ஐநா மனிதவுரிமைப் பேரவை நோக்கிய செயலொற்றுமை
2) தமிழர் தலைவிதி தமிழர் கையில் – ‘வேண்டும் பொதுவாக்கெடுப்பு’ இயக்கம் 2018
3) தமிழீழத் தேசக் கட்டுமானம்;
4) தமிழர்களின் புதுமையான அரசியல் இயக்கம் என்ற முறையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: சாதித்தவை பற்றிய மதிப்பீடு ஆகிய நான்குவிடயங்கள் இந்த அமர்வின் பிரதான மையப்பொருளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.