காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் நன்கொடைகள் முழுமையாக பளை பிரதேச சபைக்கு விடுவிக்கப்பட வேண்டும்
பளை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜூலி பவர்,வீற்ற பவர் போன்ற காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள் வடமாகாண சபையின் விவசாய அமைச்சுக்கு வருடாந்தம் இரண்டு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கிவருகின்றது எனவும் ஆனால் எமது பிரதேசத்துக்கு இதன்மூலம் எதுவித பயனும் கிடைப்பதில்லை என பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன் பச்சிலைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
பச்சிலைப்பள்ளி பிரதேசம் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு பல உட்கட்டுமானங்கள் சிதைவடைந்து காணப்படுகின்றது எனவும் இந் நிறுவனத்தால் கிடைக்கப்பெறும் நன்கொடையை குறைந்தது ஐந்து வருடங்கள் முழுமையாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு விடுவித்து தரும்பட்சத்தில் பிரதேசத்தின் தேவைகளை இயன்றவரை பூர்த்திசெய்யலாம் எனவும் வேண்டிக்கொண்டார். அத்துடன் இது தொடர்பாக முதலமைச்சருக்கு கடிதமூலம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.