மக்களை மறைப்பு வேலியாக்கியது சிங்கள இராணுவம்!

0


2009 புதுமாத்தளன் பகுதியில் வைத்தியசாலைக்கு முன்புறமுள்ள வெளிப்பகுதியில் பெருமளவான மக்கள் தரைப்பால் குடிசைகளை அமைத்து வசித்து வந்திருந்தனர். அப்பகுதியினைத்தாண்டி 100 மீற்றர் தூரத்தில் விடுதலைப்புலிகளின் காவலரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது அங்கிருந்த பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த விடயம். காவலரண்களைத்தாண்டி சிறிய நீர்ப்பரப்பு, அடுத்த பக்கம் படையினரின் காவலரண்கள். இரவு நேரத்தில் கோயில்களில் திருவிழாக்காலங்களில கட்டப்பட்டிருக்கும் லைட்டுக்கள் போலவே விடியும் வரைக்கும் ஒளிரும் வெளிச்சத்துடன் கூடிய படையினரின் மறைப்பு வேலிகள். ஆங்காங்கே படையினரின் நடமாட்டங்களை அவதானிக்க முடியும்.

மார்ச் மாதமளவில் படையினரின் பக்கத்திற்கு குறைந்தளவான பொதுமக்கள் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

விடுதலைப்புலிகளின் பக்கத்தில் இருந்து இடையிடையே (சினைப்பர்) தாக்குதல் இடம்பெற்றால் அத்தாக்குதல்களை கட்டுப்படுத்த படையினர் படையினரிடம் உதிரிகளாக சென்றிருந்த மக்களை பிடித்து வைத்தே மறைப்பு வேலிகளை அமைத்துக்கொண்டிருந்ததை எங்களால படம் பிடிக்க முடியவில்லை.

என்னிடம் இருந்த சிறிய கமரா தன்னால முடிஞ்ச அளவு பணியாற்றியிருந்தது. ஏப்பிரல் மாதம் 20 இற்கு முன்னைய நாட்களில் செஞ்சிலுவைச்சங்க கப்பலில் காயமடைந்தவர்களை ஏற்றுவதை படம் எடுப்பதற்கு படகொன்றில் போய் திரும்பி வரும்போது ஏற்பட்ட விபத்தில் நான் கடலில் விழுந்துவிட்டேன். (சகிலா அக்காவால் தான் நான் கடலில் விழ நேரிட்டது) கமரா கடலில் விழுந்து விட்டது. ஒலிப்பதிவு கருவியும் கடல்நீரில் நனைந்து பழுதுதடைந்துவிட்டது.

அந்த நாட்களில், தற்பொழுது வைத்திருக்கும் கமராவும் லென்சுகளும் இருந்திருந்தால் இன்னும் அதிகமாக பணியாற்றிருப்பன். நான் சமாதான நேரத்தில் செய்த வேலையை விட சண்டை நேரத்தில் வடிவா வேலை செய்தன். செல் விழுறதோ சாகிறதுதோ ஒன்றையும் பெரிசுபடுத்துறதில்லை. ஓய்வென்றதே இருந்ததில்லை. நித்திரையும் இருக்காது.

முழுமையாக ஆதாரங்களோடு சில விசயங்களை சொல்லமுடியவில்லை என்ற ஆதங்கம் என்னுள் எப்பொழுதும் இருக்கும் என்பதை மனம் சொல்லிக்கொண்டேயிருகிறது.

-சுரேன் கார்த்திகேசு

Leave A Reply

Your email address will not be published.