
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் அபாரமாக பந்து வீச்சால், 14 ரன்களில் நடப்பு சாம்பியன் மும்பையை வென்றது. 168 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடக்கிறது.
இதுவரை 30 ஆட்டங்கள் முடிந்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8ல் 6 ஆட்டங்களில் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஹைதராபாத், பஞ்சாப், கொல்கத்தா அணிகள் அதற்கடுத்த நிலையில் உள்ளன. அதே நேரத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 7ல் 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 6வது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இதே நிலையில் உள்ளது. ஆனால் ரன்ரேட் விகிதத்தால் 7வது இடத்தில் உள்ளது.
இதுவரை 7 ஆட்டங்களில் மும்பை மற்றும் பெங்களுர் அணிகள் விளையாடியுள்ளன. இன்றைய ஆட்டத்துடன் சேர்த்து, மேலும் 7 ஆட்டங்களே பாக்கி உள்ளன. இவற்றில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அதனால் இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால், பிளே-ஆப் சுற்றுக்கு நுழைவது மிகவும் கடினம்.
நம்பிக்கையில் மும்பை
இரு அணிகளும் இந்த சீசனில் இரண்டாவது முறையாக மோதுகின்றன. மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் மும்பை அணி 46 ரன்களில் வென்றது. அதனால் இன்றைய ஆட்டத்திலும் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் மும்பை களமிறங்கியது.
யாருக்கு கொண்டாட்டம்
மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு நேற்று பிறந்தநாள். பெங்களூர் கேப்டன் விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு இன்று பிறந்தநாள். இன்றைய ஆட்டத்தின் வெற்றியுடன் யார் பிறந்த நாளைக் கொண்டாடுவர் என்ற எதிர்பார்ப்பு இருந்தது

மும்பைக்கு சுலப இலக்கு
டாஸை வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களுர் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. மானன் வோரா 45, பிரான்டன் மெக்கலாம் 37, விராட் கோஹ்லி 32 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஹார்திக் பாண்டயா போட்டியின் 17 ஓவரில் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.

வாய்ப்பை இழந்தது
168 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூர் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மும்பையின் டுமினி 23, குருணால் பாண்டயா 23 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவை என்ற நிலையில் 50 ரன்கள் எடுத்து போராடி வந்த ஹார்திக் பாண்டயா அவுட்டானார். பெங்களூர் அணியின் உமேஷ் யாதவ், டிம் சைதி, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். இந்த வெற்றியை அடுத்து பெங்களூரு அணி 6 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது. மும்பை இந்தியன்ஸ் 7வது இடத்துக்கு தள்ளப்பட்டது.