முள்ளிவாய்க்கால் அடிபடுவதற்கான இடமல்ல! ஒன்றுபடுவதற்கான இடம்!!

0


ஈழத் தமிழர்களுக்கு நல்லதொரு தலைவன் இல்லை இப்போது இல்லை என்பதை 2009போருக்குப் பிந்தைய கால கட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள் பலவும் எடுத்துகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு தலைமை ஏற்பதற்கு முன்னரான காலத்திலும் தமிழ் தலைமைகளுக்குள் பாரிய பிளவுகளும் குழப்பங்களும் நீடித்தன. தந்தை செல்வ நாயகத்தின் முயற்சிகளுக்கு இடையூறு விளைவித்த தலைவர்களையும் ஈழம் சந்தித்திருக்கிறது.

2009இற்குப் பின்னரான கால கட்டத்தில் மீண்டும் அதே பிரச்சினை தலையெடுத்திருக்கிறது. தற்போதைய அரசியல் தலைமைகள் தமக்குள் இருக்கும் உள் போட்டிகளுக்காக அடிபடுவதே பெரும் வேலையாக செய்கின்றனர். அவர்களுக்கு தமது அரசியல் இருப்பையும் தமது ஈகோவையும் தக்க வைப்பதே பெரும் பிரச்சினையாகிவிட்டது. இதற்காக ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈழத் தமிழ் மக்கள் 2009ஆம் ஆண்டில் மாபெரும் இனப்படுகொலையை சந்தித்தவர்கள். அவர்களின் வாழ்க்கையே சின்னாபின்னமாகி உள்ளது. பல்வேறு உளவியல் சிக்கல்களுடன் பொருளாதார பின்னடைவுகளுடன் எங்கள் மக்கள் உள்ளனர். அவர்களின் நலன்களை கவனிக்கவும் அதற்காக அல்லும் பகலும் பணியாற்றவுமே தேர்தலில் மக்கள் தமது பிரதிநிதிகளை தேர்வு செய்துள்ளனர். இதில் எத்தனைபேர் இதனை உணர்ந்து செயற்படுகின்றனர்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பிரதிநித்துவம் செய்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் எவ்வளவு பிரச்சினைகள் காணப்படுகின்றன? காணி அபகரிப்புக்கள், தொல்லியல் அடையாள ஒழிப்புக்கள், சைவமத ஒடுக்குமுறைகள் என பலவும் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றை விடவும் ஒரு சிங்கள எதிர்கட்சித் தலைவராக பணியாற்றுவதே அவரது பெரும் பணியாக மாறிவிட்டது.

தமிழர்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் ஒன்றாக பயணிக்க வேண்டும் என்பதை நோக்காக கொண்டே தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலைக்கு எதிராக நின்றவர்களுக்குகூட பாவ மன்னிப்பு கொடுக்கப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேர்க்கப்பட்டது. 2009இற்குப் பின்னர் அவர்கள் உடைந்து சிதைந்து பிள்ளையார் பிடிக்க குரங்காகிய கதையாய் இருக்கிறது நிலமை.

2009 ஆம் ஆண்டின் பின்னர் எதை எடுத்தாலும் ஒருவரை ஒருவர் எதிர்க்கும் ஒரு போக்கு காணப்படுகின்றது. வடக்கின் பொருளாதார அபிவிருத்தி மையம் வவுனியாவின் ஓமந்தையில் அமைய வேண்டும் என்றும் தாண்டிக்குளத்தில் அமைய வேண்டும் என்றும் ஒரு கால் வருடம் எமது தலைவர்கள் அடிபட்டார்கள். பிறகு அந்தக் கதையே இல்லை. போர்த் தேங்காய்க்கு நாய் அடிபடப்ட கதைதான். எதற்காக போராடவேண்டும்? யாருடன் போராட வேண்டும் என்பதை அறியாமல் எங்கள் தலைவர்கள் தலைகளை உருட்டுகிறார்கள்.

இப்போது முள்ளிவாய்க்காலுக்காய் பெரியதொரு யுத்தம் நடக்கிறது. எங்கள் இனத்தை அழிக்க சிங்கள பேரினவாத அரசு முள்ளிவாய்க்கால் யுத்தம் புரிந்த நிலத்தில் இன்று நம் சமூகம் யார் முள்ளிவாய்க்காலை நினைவேந்தலை நடத்துவது என்று யுத்தம் செய்கிறது. நீயா நானா என்ற இந்தப் போட்டியும் அடிபாடும் அருவருப்பை தருகிறது. பத்திரிகைகளும் சில இணையங்களும் இதனை ஊதிப் பெருப்பிக்கின்றன. சில இணையத்தளங்களுக்கு தமிழ் இனத்திற்குள் சண்டை ஏற்படுவதுதான் நன்றாகப் பிடிக்கும்.

எல்லாவற்றுக்குமே விடுதலைப் புலிகள் களத்தில் இல்லை என்பதே காரணம். இதுவே மக்களின் மனக்குமுறலும்.

அதனைவைத்து தம் தளங்களில் எழுதி ஊடக பரபரப்பை ஏற்படுத்துவார்கள். இவர்கள் எதிரியை காட்டிலும் ஆபத்தானவர்கள். துரோகிகளை காட்டிலும் ஆபத்தானவர்கள். அவ்வாறுதான் இப்போது முள்ளிவாய்க்காலில் எண்ணையை ஊற்றி பற்ற வைக்கிறார்கள். ஆனால் எங்கள் மக்கள் மிக மௌனமாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு முள்ளிவாய்க்காலை எப்படிக் கொண்டாட வேண்டும், மாவீரர் தினத்தை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். அவர்களுக்கு யாரும் பாடம் நடாத்த வேண்டியதில்லை.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யார் நடாத்துவது என்ற போட்டியில் பலரும் இறங்கிவிட்டனர். ஆனால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதியை யார் பெற்றுக் கொடுப்பது என்று போட்டிபோடத்தான் யாருமில்லை. அன்பான தமிழீழ மக்களே. முள்ளிவாய்க்கால் தமிழீழமே ஒன்றுபட வேண்டிய நிலம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். முள்ளிவாய்க்கால் அடிபடுவதற்கான இடமல்ல. முள்ளிவாய்க்கால் ஒன்றுபடுவதற்கான இடம். ஒடுக்கப்பட்ட தமிழீழ மக்களாக அனைவரும் இணைந்து படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தலை நடாத்த ஒன்றிணைவோம்.

ஆசிரியர்.
12.05.2018.

Leave A Reply

Your email address will not be published.