ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் வரலாற்றின் வலி சுமந்த மாதம் மே மாதம். இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையை நாம் சந்தித்த காலம். தமிழின அழிப்பு என்பது அறுபது வருடங்களாக நிகழ்ந்தது. அதிலும் முள்ளிவாய்க்காலுக்கான இறுதி யுத்தம் என்பது 2006இல் கிழக்கில் தொடங்கி 2009 வரையான காலத்தில் அதாவது மூன்று வருடங்களில் நிகழ்ந்தது. ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட நீண்ட நெடிய இனப்படுகொலையை நினைவு கூர முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை உச்சமான மே மாதமே பொருத்தமானது.
தமிழின வரலாற்றில் மே மாதத்தை ஒருபோதும் மறந்துவிட முடியாது. ஈழத் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்பட்டதை எவரும் மறந்துவிட முடியாது. ஈழத் தமிழ் மக்கள் கொத்துக் குண்டுகளால் பிய்த்தெறியப்பட்டதை எவரும் மறந்துவிட முடியாது. உலகமே வேடிக்கை பார்க்க உலகத்தின் பேராதரவுடன் சிங்கள அரசு இப் படுகொலையை நிகழ்த்தியது. விடுதலை வேண்டி எண்ணற்ற தியாகங்களை செய்து உருவான உன்னதமான ஓர் இயக்கத்தை அழிக்க நிகழ்த்தப்பட்ட மிக மோசமான இனப்படுகொலையாகும்.
போர் முடிந்து ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் ஒரு வருடத்தில் பத்து வருடங்களை தொட்டு விடுவோம். அதாவது ஒரு தசாப்தம் ஆகிவிடும். ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்துவிட்டது. முள்ளிவாய்க்கால் படுகொலையை நிகழ்த்திய ராஜபக்ச அரசாங்கம் ஓய்வெடுக்க அவரது உற்ற நண்பர் மைத்திரிபால சிறிசேன அரசை பொறுப்பெடுத்துக் கொண்டார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைப் பொறுத்த வரையிலும் ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் இருவரும் ஒருவரே. இரண்டரசும் ஒன்றே.
ஈழத் தமிழ் மக்கள் முன்னால் இன்றுள்ள பெரிய பொறுப்பும் பெரிய போராட்டமும் என்னவெனில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளுவதே ஆகும். வீதிகள் அமைப்பதும், தேர்தல் நடத்துவதும் என்று ஈழத் தமிழ் மக்களின் கவனத்தை வேறு திசையில் இழுத்துக் கொண்டு செல்கிறது சிங்கள அரசு. இதற்கு தமிழ் தலைமைகளும் உடந்தையாகிவிட்டன என்பதே பெருந்துயரம். சிங்கள அரசு இன்று விரித்துள்ள வலையில் தமிழ் தலைமைகள் வீழ்ந்துவிட்டன.
சமஷ்டி தருவோம், காணி தருவோம், இராணுவத்தை நீக்குவோம் என்று வாக்குறுதிகளை அளித்துவிட்டு, இனப்படுகொலை குற்றச்சாட்டை வாபஸ்வாங்குங்கள் , சர்வதேச விசாரணையை வாபஸ் வாங்குங்கள் என்று சிங்கள தமிழ் தலைமையை வேறு திசைக்குள் தள்ளிவிட்டுள்ளது. இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்! நீதி வேண்டும் என்று குரல் எழுப்புவதை தமிழ் தலைவர்கள் இப்போது தவிர்த்துவிட்டனர். அதனையே சிங்கள அரசு எதிர்பார்க்கின்றது. இந்த அரசியல் ஆட்டத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் அதற்கான நீதியும் மறைக்கப்படுகிறது.
ஆனால் காயப்பட்ட தமிழினம் அதை மறக்க முடியாது. அதற்கான நீதியை பெறாமல் இருக்க முடியாது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதியில்தான் ஈழத் தமிழ் இனத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது. இந்த வலி சுமந்த மாத்தில் தன் பயணத்தை தொடங்கியுள்ள ஈழம் நியூஸ் எம் இனத்திற்கான போராட்ட ஊடகக் குரலாகவும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நீதியை வேண்டும் குரலாகவும் ஒலித்துச் செயலாற்றும்.
ஆசிரியர்.
04.05.2018.