`ஆர்.கே.நகரின் பெரிய வெற்றிக்குப் பிறகும், என்ன நிலமை?’ – தினகரன், சசிகலா வகுக்கும் வியூகங்கள்

0

`நாம் தவறு செய்ததால்தான் கருணாஸ் உட்பட அனைவரும் ஸ்டாலினிடம் போய் நிற்கிறார்கள்’ என ஆதங்கப்பட்டுப் பேசியிருக்கிறார் சசிகலா.

தினகரன் ஆதரவு தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களின் வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது உச்ச நீதிமன்றம். இதனால், ஆளும்கட்சி தரப்புக்குக் கூடுதல் உதறல் ஏற்பட்டுள்ளது. `தனிக்கட்சி தொடங்கினாலும் நம்மை மற்ற கட்சிகள் ஆதரிக்காமல் இருப்பதன் பின்னணியில் சில விஷயங்கள் உள்ளன. தகுதிநீக்க வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு, அவற்றைச் சரிசெய்யும் வேலையில் ஈடுபட வேண்டும்’ எனத் தினகரனிடம் பேசியிருக்கிறார் சசிகலா.

`எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை’ என ஆளுநரிடம் மனு கொடுத்த காரணத்துக்காகத் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். இந்த வழக்கில் நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்பால், தினகரன் தரப்பினர் சோர்வடைந்தனர். இதையடுத்து, வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்தார் தங்க.தமிழ்ச்செல்வன். இந்த விவகாரத்தில் தினகரனோடு அவருக்கு மோதல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதற்குப் பதில் கொடுத்த தங்க.தமிழ்ச்செல்வன், `மூன்றாவது நீதிபதி விசாரிக்கும்போது, அவரிடம் வாபஸ் பெறுவதற்கான கடிதத்தைக் கொடுப்பேன். தினகரனிடம் ஆலோசித்துவிட்டுத்தான் இந்த முடிவை எடுக்கிறேன்’ என்றார். ஆனால், தற்போது வரையில் வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை அவர் அளிக்கவில்லை.


இதுகுறித்து நேற்று பேசிய அவர், `எனது தகுதிநீக்க வழக்கை வாபஸ் பெறுவதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன. இரண்டு நீதிபதிகள் அமர்வில் வழங்குவதா, மூன்றாவது நீதிபதியிடம் வழங்குவதா என்ற குழப்பம் உள்ளது. அப்படியே தொகுதி காலி என அறிவிக்கப்பட்டாலும் உடனடியாகத் தேர்தல் நடத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும் என்னுடைய மனுவை தேர்தல் அதிகாரி நிராகரிக்கவும் வாய்ப்பு அதிகம். இந்தக் காரணங்களால்தான் என்னுடைய மனுவை வாபஸ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

தினகரன்இதுதொடர்பாக, கடந்த வாரம் சசிகலாவைச் சந்தித்துப் பேசச் சென்ற தங்க.தமிழ்ச்செல்வனுக்கு அனுமதி கிடைக்கவில்லை. `தினகரன் நினைத்திருந்தால் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்க முடியும். தன்னைத் தாண்டி சசிகலாவை தங்க.தமிழ்ச்செல்வன் சந்திப்பதை அவர் விரும்பவில்லை’ எனத் தெரிவித்தனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள். இந்நிலையில், தகுதிநீக்க வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார் தினகரன். இந்த முயற்சிக்குப் பிறகுதான், தன்னுடைய வாபஸ் முடிவில் தயக்கம் காட்டத் தொடங்கியிருக்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன். இந்த வழக்கு தொடர்பாகவும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் சசிகலாவிடம் தீவிரமாக விவாதித்திருக்கிறார் தினகரன்.

இந்த சந்திப்பில் பேசிய சசிகலா, ” ஆர்.கே.நகரில் நாம் வெற்றி பெற்றதற்கு தி.மு.க தான் காரணம், அங்கு களத்தில் தி.மு.க செயல்படவில்லை. அதனால்தான் அ.தி.மு.க வாக்குகளும் நமக்கு வந்து சேர்ந்தன. அந்தத் தேர்தலில் 27 சதவீத வாக்குகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு வாங்கியது. இந்த வாக்குகளைக் குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம். திண்டுக்கல், கோவை இடைத்தேர்தல்களில் கருணாநிதியே வாங்காத வாக்குகள் இவை. இப்படியொரு வெற்றி நமக்குக் கிடைத்ததற்குப் பிறகும் பிற கட்சிகள் நம்மைத் தேடி ஏன் வரவில்லை. கம்யூனிஸ்ட்டுகள் உள்பட பலரும் ஸ்டாலின் பின்னால்தான் ஓடுகின்றனர். தேர்தல் வெற்றிக்குப் பிறகு நாம் ஸ்டாலினை நோக்கி அரசியல் செய்திருந்தால், இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்காது. இதுநாள் வரையில் தவறான அரசியல் செய்து, ஸ்டாலினை முன்னேறவிட்டதாகத்தான் பார்க்கிறேன். அதனால்தான், புதிதாக கட்சி தொடங்கிய நம் பின்னால் யாரும் இல்லை. இனி வரக் கூடிய நாள்களில் தி.மு.கவையும் பா.ஜ.கவையும் வலுவாக எதிர்த்தால் மட்டுமே நாம் நீடிக்க முடியும். நாம் தவறு செய்ததால்தான் கருணாஸ் உள்பட அனைவரும் ஸ்டாலினிடம் போய் நிற்கிறார்கள்” என ஆதங்கப்பட்டுப் பேசியிருக்கிறார்.

” நாளை உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார் மூத்த வழக்கறிஞர் சிங்கி. ஒருவேளை தினகரன் தரப்பினருக்குச் சாதகமாக உத்தரவு வந்தால், அரசியல்ரீதியாக தன்னை முன்னிலைப்படுத்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறார் தினகரன். ‘நாடாளுமன்றத் தேர்தல் வரையில் எடப்பாடி பழனிசாமியின் நாற்காலியை அசைக்க முடியாது’ என்ற உண்மை தெரிந்திருந்தும், சட்டரீதியாகத் தென்படும் அனைத்து வழிகளையும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் டி.டி.வி. எனவேதான், ஸ்டாலினுக்குப் பக்கபலமாக நின்று அரசியல் செய்தால், தன்னுடைய இருப்பு கேள்விக்குறியாகவிடும் என்பதையும் அவர் உணர்ந்து வைத்திருக்கிறார். அதைத்தான் சிறை சந்திப்பிலும் சுட்டிக் காட்டினார் சசிகலா” என்கின்றனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள்.

ஒற்றை இடைத்தேர்தல் வெற்றியை வைத்து சசிகலாவும் தினகரனும் வகுக்கும் வியூகங்களின் பலன்…. என்னவென்று காலம்தான் பதில் சொல்லும்!

Leave A Reply

Your email address will not be published.