அன்று காலை என்றும்போல் விடியவில்லை
இறந்தகாலமும் இறந்துபோயிருக்க
அடையாளமற்றவர்களாய் விழித்தெழுந்தோம்
நெருப்பு எல்லாப் புத்தகங்களையும்
வாசித்துத் தீர்த்திருந்தது
வார்த்தைகள் கரும்புகைத் திரளாகி மேலெழுந்து
அடைமழையாக எம் கண்களுக்கே திரும்பிவந்தன
பக்கங்கள் புரட்டப்படும் ஓசையை
சில காலம் சன்னங்கள் நிரவின
சரஸ்வதி வேறு வழியற்றுப்போய்
காளியாய் உருக்கொண்டு சன்னதமாடினாள்
பிறகொருநாள்
வெள்ளையடித்து மூடப்பட்டது துயரம்
காலடியினுள் இன்னுந்தான் கேட்கிறது
அன்று கருகிய ஆன்மாக்களின் கூக்குரல்
ஹெய்ன்றிச் ஹெய்னெ!
நீங்கள் சொன்னதுதான்
அவர்கள் முதலில் புத்தகங்களை எரித்தார்கள்
பிறகு
மனிதர்களை!
-97,000 புத்தகங்களையும் அருஞ்சுவடிகளையும் ஆவணங்களையும் கொண்ட யாழ்ப்பாண நூலகம், ஜூன் 01, 1981 அன்று சிங்களப் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டது.
– தமிழ்நதி