உண்மையிலேயே ஈழத்தில் புலிகள் மீளுருவாக்கம் செய்கின்றனரா?

0

2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையிலான யுத்தம் மௌனிக்கப்பட்டது. போரின் இறுதிக் கணங்களில் விடுதலைப் போராட்டத்திற்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்படுவதாக விடுதலைப் புலிகள் தரப்பால் அறிவிக்கப்பட்டது. அத்துடன் சுமார் பத்தாயிரம் போராளிகளும் சர்வதேச உத்தரவாதங்களுக்கு அமைய சிங்கள அரசிடம் சரணடைந்து தமது ஆளுயுதங்களையும் கீழே போட்டனர்.

விடுதலைப் புலிகள் ஓர் ஒழுக்கம் உள்ள இயக்கம். இராணுவ ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் ஒழுக்கத்தை முப்பதாண்டுகளாக காட்டிக் காத்த இயக்கம். கடந்த காலத்தில் இராணுவ ரீதியான ஒழுக்கத்தின் பாற்பட்ட  பல்வேறு விடுதலைப் புலி உறுப்பினர்கள் தலைமையின் கட்டளையின்றிய நிலையில் தாக்குதல்களை நடத்தாமலேயே தமது உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாகுவார்களா? என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடம் உள்ளது. அதாவது ஈழ மக்களிடம் மாத்திரமின்றி உலக தமிழ் மக்களிடையேயும் காணப்படுகின்றது. ஏனென்றால் விடுதலைப் புலிகள் எதற்காக ஆயுதம் ஏந்திப் போரிட்டார்களோ அந்தப் பிரச்சினைகள் இப்போது இன்னமும் உக்கிரம் கொண்டு காணப்படுகின்றன.

அத்துடன் 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஈழ மக்கள் சரியான பாதுகாப்பு இல்லாத நிலையில் வாழ்கின்றனர். அவர்களுக்கு சரியான தலைமைத்துவம் இல்லை. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களை வைத்து ஏமாற்றி தமது அரசியல் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களால் தமிழ் மக்களுக்கு ஒரு துளியேனும் நல்ல சூழலைப் பெற்று தர இயலும் என்று தமிழ் மக்கள் நம்பிவில்லை.

இவ்வாறான ஒரு நிலையிலேயே விடுதலைப் புலிகள் பற்றிய ஏக்கம் காணப்படுகின்றது.

மறுபுறத்தில் சிங்கள அரசுக்கு விடுதலைப் புலிகள் பற்றிய பொய்யான கதைகள் அவசியமாகின்றன.

அண்மையில் சுவிஸ்நாட்டு நீதிமன்றம் ஒரு தீர்ப்பை அறிவித்திருந்தது. விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கம் இல்லை என்றும் அவர்கள் இன விடியலுக்காக போராடிய அமைப்பு என்றும் கூறியிருந்தது. இது இலங்கை அரசை பெறும் கலவரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்த அங்கீகாரம் அவர்களின் கோரிக்கையான தனித் தமிழ் ஈழம் குறித்த அங்கீகாரமாக மாறி வருவதாக சிங்கள அரசு அஞ்சுகிறது.

இந்த நிலையிலேயே விடுதலைப் புலிகள் இராணுவத் தாக்குதல்களை நடாத்த தயாராகி வருவதுபோன்ற தோற்றப்பாட்டை காண்பிக்க சிங்கள அரசு முயற்கிறது. கடந்த காலத்தில் அதாவது 2014ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்ச அரசு இவ்வாறு ஒரு நாடகத்தை அரங்கேற்றியது. விடுதலைப் புலிகள் மீள் உருவாகி வந்தாகவும் அவர்களை தாம் தாக்கி அழித்ததாகவும் கூறியது.

இதனை வைத்து அப்பாவி பொதுமக்கள் பலரை சிறையில் அடைத்தது. பின்னர் இந்த சம்பங்களை ஐ.நா அவையில் காண்பித்து விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இன்னமும் காணப்படுவதாகவும் அவர்களை தடைசெய்ய வேண்டும் என்றும் கோரியது. இவ்வாறு இத்தகைய நாடகங்கள் முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே அரங்கேற்றப்படுகின்றன.

விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் செய்யப்படுவது அவ்வளவு கடினமான விடயமல்ல. ஆனால் மொக்கைத்தனமாக ஒரு கிளைமோரும், ஒரு புலிக்கொடியும், ஒரு சீருடையும் கொண்டு விடுதலைப் புலிகள் மீள வந்துவிட்டனர் என்பது வெறும் நாடகத்தனம் என்பதை சிறு பிள்ளையும் அறியும். இனி வரும் காலத்தில் அவ்வாறு ஒன்று நிகழ்ந்தாலும் விடுதலைப் புலிகளின் ஆயுதம் இனி இதுவாக இருக்காது.

எனவே இராணுவ ஒழுக்கத்துடன் மெளினிக்கப்பட்டு துப்பாக்கிளை கீழே போட்ட ஒரு இயக்கத்தை தனது அரசியல் காரணங்களுக்காக சிங்கள அரசு இவ்வாறு பயன்படுத்துவது மிகவும் அநாகரிகமானது. எவ்வாறெனினும் எதிர்வரும் காலத்தில் எல்லா அநியாங்களுக்காகவும் சிங்கள அரசும் சிங்கள இராணுவமும் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

ஆசிரியர்,
ஈழம்நியூஸ்.
25.06.2018

Leave A Reply

Your email address will not be published.