எனக்கு தரப்பட்ட பணி, சல்மான் கானை கொல்வது” விசாரணையில் அதிர வைத்த பிரபல ரவுடி!

0

போலீசாரால் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி ஒருவர், தான் சல்மான் கானை கொல்ல திட்டமிட்டதாகவும் அதற்காக மும்பை சென்றதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்று ஹரியானா போலீசாரால் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சம்பத் நெஹ்ரா என்பவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஓய்வு பெற்ற உதவிக் காவல் ஆய்வாளரின் மகன் ஆவார். லாரன்ஸ் பிஷ்னாய் கேங்ஸ்டர் கூட்டத்தைச் சேர்ந்த இவர் 10 -க்கும் மேற்பட்ட கொலை, கார் கடத்தல், திருட்டு போன்ற பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இவர் ஹைதராபாத் நகரில் வைத்து ஹரியானா சிறப்பு காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “எங்கள் கூட்டத்தின் கொல்லப்படவேண்டியவர்களின் பட்டியலில் சல்மான்கானும் ஒருவர். அவரைக் கொல்லும் பணி எனக்குத் தரப்பட்டது” எனக் கூறியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஹரியானா காவல்துறை அதிகாரி சதீஷ் பாலன் கூறுகையில், “சல்மான் கானைக் கொல்லும் பணியை பிஷ்னாய், சம்பத்திடம் ஒப்படைத்திருக்கிறார்.

அவர்கள் கூட்டத்தில் இவர் ஒருவருக்குத்தான் இந்தப் பணி தரப்பட்டுள்ளது. இதற்காக மும்பை சென்று சல்மான் கான் தங்கி இருக்கும் வீட்டை நோட்டமிட்டு, புகைப்படங்களும் அவர் எடுத்துள்ளார். சல்மான் கானின் நகர்வுகளைத் தொடர்ந்து 2 நாள் கண்காணித்து பின் திரும்பியுள்ளார். இவர் 2016 -ம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது பிஷ்னாய் -வுடன் சிறையில் இருந்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பிஷ்னாய் சிறையில் இருந்துகொண்டே பெரிய நெட்வொர்க்கை இயக்கி வந்துள்ளார்” என்றார்.

கடந்த மே மாதம் சட்டீஸ்கரில் இருந்து மும்பைக்குச் சென்ற சம்பத், பின்னர் இரண்டு நாள் கழித்து அங்கிருந்து கிளம்பியுள்ளார். அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், அதன் பின்னர் அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.