அண்மையில் கிளிநொச்சி பகுதியில் உள்ள அம்பாள்குளம் என்னும் கிராமத்தில் சிறுத்தை ஒன்று கிராமவாசிகளால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது .குறித்த சிறுத்தை கிராமத்துக்குள் நுழைந்து கிராமவாசிகள் 10 பேரை தாக்கியதன் காரணமாகவே சிறுத்தையை கொலை செய்ததாக கிராமவாசிகள் தெரிவித்திருந்தனர். சிறுத்தை துன்புறுத்தப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் கொலையை செய்யப்பட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருந்தது .
கொடூரமான முறையில் சிறுத்தை கொல்லப்பட்டமை தொடர்பில் மக்கள் தமது கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார்கள் .அத்துடன் சிறுத்தை தமிழீழ தேசிய விலங்கு என்பதுடன் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் அன்பாக பராமரிக்கப்பட்ட ஒரு விலங்கு .இதனால் சிறுத்தை கொல்லப்பட்டமை தொடர்பில் மேலும் கண்டனங்கள் எழுந்திருந்தன.
சிறுத்தை புலியை கொன்ற சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களை கிளிநொச்சி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.கடந்த 21ஆம் திகதி அம்பாள்குளம் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை புலியை கொன்றவர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய சிறுத்தை புலியை கொலை செய்யும் போது எடுக்கப்பட்ட காணொளி காட்சிகளை அடிப்படையாக கொண்டு பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
காணொளி காட்சிகளின் அடிப்படையில் பொலிஸார் நான்கு சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளனர். இவர்களை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தை புலியை கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை கிளநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.