சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த காலா படம் பல நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது .கபாலி என்னும் வெற்றி திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது தடவையாக ரஞ்சித் மற்றும் ரஜனி கூட்டணியில் வெளிவந்த காலா திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வந்தது .ஆனாலும் படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலினை குவிக்கவில்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
உலகம் முழுவதும் ‘காலா’ திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்தாலும் ரஜினிகாந்தின் முந்தைய படங்கள் செய்த வசூல் சாதனையை கூட காலா படம் தொடவில்லை.வெளியான ஐந்து நாட்களில் காலா படம் உலக பாக்ஸ் ஆபீஸில் இதுவரை ரூ. 122.5 கோடி வசூல் செய்துள்ளது. ஆனால் ரஞ்சித், ரஜினி கூட்டணியில் முன்னதாக வெளியான கபாலி படம் கூட உலக பாக்ஸ் ஆபீஸில், முதல் ஐந்து நாட்களில் ரூ. 225 கோடி வசூல் செய்திருந்தது.
இந்தியாவின் தென் மாநிலங்களில் இதுவரை காலா வெறும் ரூ. 73 கோடி தான் வசூல் செய்துள்ளது. அதில் பெரும்பாலான வசூல் (ரூ. 47.5 கோடி) தமிழகத்தில் தான் கிடைத்துள்ளது. தெலுங்கில் வெறும் ரூ. 5 கோடி தான் வசூலாகியுள்ளது. ஹிந்தியிலும் இதே நிலைதான். இந்தியாவில் மட்டும் வெளியான ஐந்து நாட்களி இதுவரை ரூ. 78 கோடி மொத்தமாக காலா படம் வசூல் செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனையின் போது ரஜனிகாந்த் போராட்டக்காரர்களை கொச்சைப்படுத்தும் வகையில் குதர்க்கமான கருத்துக்களை வெளியிட்டு இருந்தார் .இதனால் தமிழ் மக்கள் ரஜனிகாந்த் மீது கொதிப்படைந்தனர் .உலகளாவிய ரீதியில் காலா படத்தை புறக்கணிக்கும் படி சமூகவலைத்தளங்களில் பலரும் கோரிக்கை விடுத்தனர் .ரஜனியின் அண்மைக்கால கருத்துக்கள் தான் காலா படம் காலை வாரியதற்கான காரணங்களில் ஒன்று என்பது உண்மை .