படைப்பாளிகளின் கருத்துரிமை பறிக்கப்படுகிறது – வைரமுத்து வேதனை

0

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநாட்டில் கலந்துக் கொண்ட வைரமுத்து, படைப்பாளிகளின் கருத்துரிமை பறிக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு புதுவையில் நேற்று முன்தினம் தொடங்கியது. மாநாட்டையொட்டி நேற்று காலையில் பொது மாநாடு நடந்தது.

அதைத்தொடர்ந்து கருத்துரிமை கருத்தரங்க மாநாடு கம்பன் கலையரங்கில் மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அருணன் தலைமை தாங்கினார். இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

தமிழர்களுக்கு கருத்துரிமை என்பது பிறப்புரிமை. ‘நெற்றிக்கண் திறப்பின் குற்றம் குற்றமே’ என ஆண்டவரையே எதிர்த்து கேட்டது தமிழ்ச்சமூகம். அறிவு, ஆராய்ச்சி அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த கருத்துரிமை மிக அவசியம். கருத்துகள் கடத்தப்படும் போதுதான் வளர்ச்சி ஏற்படுகிறது.

இந்து மதத்தில் இருக்கும் சில கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு. கடவுள் மறுப்பு உடையவர்கள், நாத்திகம் பேசுபவர்களுக்கு கூட இந்து மதம் இடம் தருகிறது.

எந்த மதமும், எந்த சிந்தனையும் முழுமையானது அல்ல. அதுமாறிக் கொண்டே இருக்கும். கருத்துரிமை இருந்தால்தான் புதிய சிந்தனை பிறக்கும். முற்போக்கு சிந்தனை வாதிகள், பெரியாரின் கொள்கைகளை தூக்கி பிடிக்க வேண்டும்.

ஆங்கிலேயர் காலத்தில் பாரதிக்கு இருந்த கருத்து சுதந்திரம் இப்போது எனக்கும் (வைரமுத்து), பெருமாள் முருகனுக்கும் இல்லை.

இந்தியாவில் படைப்பாளிகளின் கருத்துரிமை பறிக்கப்படுகிறது. கருத்தை கருத்தால் எதிர்கொள்வதுதான் நாகரிகத்தின் உச்சம். சகிப்புத்தன்மை இல்லாத நாடு வளர்ச்சி அடையாது. சசிப்புத்தன்மை இருந்தால் தான் ஜனநாயகம் மேன்மை அடையும்.

கருத்துரிமையை தடுக்கும் போது, இது 2 மடங்கு வீரியம் பெற்று விடுகிறது. வேண்டாத கற்களை செதுக்கும் போதுதான் அழகான சிற்பம் பிறக்கிறது. அது போல் மதவாதம், அறியாமை, ஏழ்மை, பேதம், சாதி ஆகியவற்றை ஒதுக்கினால் நல்ல மனிதன் பிறப்பான்.

இவ்வாறு வைரமுத்து பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.