தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை போலீஸார் கைது செய்துவரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான வியனரசு, தன் மகளின் திருமணத்துக்காக 2 நாள்கள் பிணையில் வந்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மே 22-ம் தேதி கலெக்டர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றபோது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அதில் 13 பேர் கொல்லப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் அரசு சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களைத் தூத்துக்குடி மாவட்ட போலீஸார், நள்ளிரவில் வீடுவீடாகத் தேடிச் சென்று கைது செய்து வருகிறார்கள். இரவு நேரங்களில் குழந்தைகள், பெண்களைப் போலீஸார் அச்சுறுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால், இதை மறுத்த தூத்துக்குடி எஸ்.பி-யான முரளி ரம்பா, `ஸ்டெர்லைட் கலவரத்தில் சுமார் 15 கோடி மதிப்புள்ள, அரசு மற்றும் தனியார் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 248 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பெண்கள் குழந்தைகள் யாரையும் கைது செய்யவில்லை’ எனத் தெரிவித்தார்.
இந்தநிலையில், தூத்துக்குடி சம்பவம் தொடர்பாகப் போலீஸாரின் கைது நடவடிக்கைத் தொடர்கிறது. மே 30-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான வியனரசு ஆழ்வார்திருநகரி அருகில் ரத்தனபுரியில் உள்ள வீட்டில் இருந்தபோது அதிகாலை 4.30 மணிக்கு கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் சந்தித்தார்.
இதனிடையே, வியனரசுவின் மகள் கயல்விழியின் திருமணம் 17-ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த நிலையில் வியனரசுவை போலீஸார் கைது செய்தனர். அதனால் அவர் மகளின் திருமணம் நின்றுவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டது. அதனால் வியனரசு குடும்பத்தினர் மிகுந்த அச்சமடைந்தனர். அதைத் தொடர்ந்து அவரைப் பிணையில் எடுக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள்.
ஆனால், போலீஸ் தரப்பில் அவருக்கு ஜாமீன் கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனால், அவருக்கு இரு தினங்கள் மட்டுமே ஜாமீன் கிடைத்தது. அந்த இரு தினங்களிலும் தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜாமீனில் வெளியில் வந்த அவர், கயல்விழி – கருப்பசாமி திருமணத்தை எளிமையான முறையில் நடத்தி வைத்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.