மாமனிதர் துரைராசாவின் பொறியியல்ப் பீடக் கனவு!

பலித்தது!

0

தமிழர் மண்ணில் ஒரு பொறியியல் பீடத்தை நிறுவவேண்டும் என்று பெருங்கனவு ஒன்றை விதைத்தார் மாமனிதர் பேராசிரியர் துரைராசா.

அந்த வகையில் யாழ்ப்பாணத்தின் முதல் தொகுதிப் பொறியியலாளர்கள் நாளை வெளியேறவிருக்கின்றனர். இது வரை காலமும் யாழ்ப்பாணத்திலிருந்து பொறியியல் பீடத்துக்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகம், மொரட்டுவ பல்கலைக்கழகம், ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம், ருகுண பல்கலைக்கழகம், ஆகியவற்றில் சென்றுபட்டம் பெற்று வந்தனர். இம்முறை முதன் முதலாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தமிழ் மண்ணிலிருந்து பொறியியலாளர்களாக வெளிவரவிருக்கின்றனர்.

நாளை 8 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பொதுப்பட்டமளிப்பின் இரண்டாவது பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கற்றுத் தேர்ந்த 33 பேர் பொறியியல் விஞ்ஞானமாணி பட்டம் பெற்று பொறியியலாளர்களாக வெளியேறவிருக்கின்றனர்.

பொறியியல் துறையில் உலகம் போற்றும் :”துரை விதியை” அறிமுகப்படுத்திய மாமனிதர் பேராசிரியர் அ. துரைராஜா அவர்களின் கனவு இப்போது நனவாகியிருக்கின்றது. பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வந்த போது யாழ்ப்பாணத்தில் பொறியியல் பீடமொன்றை நிறுவ வேண்டும் என்ற கனவோடு செயலாற்றியவர் மாமனிதர் பேராசிரியர் அ. துரைராஜா. அவரது கனவு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு கைகூடியிருக்கின்றது.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தை அமைப்பதற்கான முயற்சி முதன் முதலாக 1979 ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டு பல்கலைக்கழக மூதவையில் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட முன் மொழிவு, மூதவையிலும், பல்கலைக்கழகப் பேரவையிலும் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்வதற்கெனக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 1988 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடமொன்றை கிளிநொச்சியில் தாபிப்பதற்கான அனுமதியை வழங்கியதுடன், 1991/1992 கல்வி ஆண்டில் பொறியியல் பீடத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கும் தீர்மானித்திருந்தது. எனினும், நாட்டில் நிலவிய சூழ்நிலைகள் காரணமாக அந்த முயற்சி கைகூடவில்லை. அதன் பின் பல தடவைகள் பொறியியல் பீடத்தை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை காலந்தாழ்த்தப்பட்டு வந்தன.

2010 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் பேரவை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலமையாளர்கள், புலம்பெயர் கல்வியியலாளர்களின் வேண்டுகோளின் பலனாக யாழ். பல்கலைக் கழகத்தின் மூதவையில் அப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கன் தலைமை மற்றும் வழிகாட்டலில் நடந்த அமர்வில் 2010 ஐப்பசி 29 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைக் கிளிநொச்சியில் அமைப்பது தொடர்பில் ஆராய்வதற்கென பேராசிரியர் க.கந்தசாமி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

அந்தக் குழு, துணைவேந்திரின் வழிகாட்டல்களுடன் முன்னைய குழுக்களின் பரிந்துரைகளையும் சேர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைக் கிளிநொச்சியில் அமைப்பதற்கும், முதற்கட்டமாக குடிசார் பொறியியல், இலத்திரனியல் பொறியியல், கணினிப் பொறியியல் துறைகளை ஆரம்பிப்பதற்கும் நிரந்தர கட்டடங்கள் அமைக்கப்படும் வரை பொறியியல் பீடத்தை கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள விவசாய பீடத்துடன் அமைப்பதற்கும் 2011 பங்குனி 29 ஆம் திகதி மூதவைக்குப் பரிந்துரை செய்தது.

அவை அதே ஆண்டு சித்திரை 3 ஆம் திகதிய கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கூடாக உயர் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீடத்தை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை முன்மொழிவு 2012 மார்கழி 5 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு, 2013 தை 4 ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு உடனடியாகவே – அந்த ஆண்டிலேயே மாணவர்களை உள்ளீர்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

முதலாவது தொகுதியில் 47 மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர். முதலாவது பீடாதிபதியாக பேராதனை பல்கலைக் கழகத்தில் இருந்து பேராசிரியர் அ.அற்புதராஜா பதிவியேற்றார்.ஆரம்பத்தில் விவசாய பீடத்தோடு இணைந்ததாக பொறியியல் பீடத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், இலங்கை மற்றும் இந்திய அரசுகளின் நிதியுதவிகளோடு துரிதமாக பௌதிக அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு முழுக் கட்டமைப்புடைய ஒரு பொறியியல் பீடமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீடம் நிமிர்ந்து நிற்கிறது.

Leave A Reply

Your email address will not be published.