மீண்டும் புலி வந்தால்தான் சரி!

0

தனது இராஜினாமாக் கடிதத்தின் முக்கால் வாசியை எழுதிக் கொண்டிருக்கிறாராம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன். சிங்கள அரசை நம்ப வேண்டாம், காலம் காலமாக அவர்கள் நம்ப வைத்து கழுத்தறுப்பவர்கள், இதனால்தான் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போரிட்டனர் என்று படித்துப் படித்து சொன்னபோதேல்லாம் மென் வலு வன் வலு பேசிக் கொண்டும் புலிகளுக்காக தான் மன்னிப்பு கேட்கிறேன் என்று பேசிக் கொண்டும் இருந்தவர் சுமந்திரன்.

இன்றைக்குத்தான் சுமந்திரனுக்குப் புத்தி வந்திருக்காம். வடமராட்சி கிழக்கில் நடந்த போராட்டத்தில் குந்தி இருக்கிறார். உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன் என்பதைப்போல இந்த சுமந்திரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்த நான்கு வருடங்களில் எங்களை நாசமாக்கி, மோசமாக்கி விட்டார்கள். முதலில் இந்த அரசை இனப்படுகொலை போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து பாதுகாத்து எங்கள் நீதிக்கான போராட்டத்தை மிகவும் பலவீனப்படுத்தி விட்டார்கள். சிங்களவனோ, மகிந்தவும் மைத்திரியும் ஒன்று அதை அறியாதவன் வாயில் மண்ணு என்றுவிட்டார்கள்.

கால அவகாசம் கொடுத்தும், நல்லிணக்க நாயகன் பட்டம் கொடுத்தும் நோபல் பரிசுக்குப் பரிந்துரைத்தும் எத்தனை ஆட்டம் போட்டார்கள். இப்போது அரசு தம்மை ஏமாற்றிவிட்டதாம். அரசியலமைப்பு வருகிறது. தீர்வு வருகிறது. எல்லாம் சரியாகிவிடும். ஒன்றுபட்ட இலங்கை, ஒற்றை இலங்கை என்று எத்தனை கூத்துக்களை ஆடினார்கள். கடைசியில் அறப்படிச்சவன் கூழ்ப்  பாவனைக்குள்ள விழுந்த கதையாகி இப்ப தங்களை சிங்கள அரசு ஏமாற்றிவிட்டதாம்.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கட்சிக்குள் பிரித்து, சிங்கள அரசுக்கு ஏற்றால்போல் கட்சிக்குள் காய்களை நகர்த்தி எத்தனை காரியங்களை செய்தார் சுமந்திரன். வடக்கு முதல்வரின் பதவியை பறிக்க சூழ்ச்சி செய்து வடக்கு மாகாண சபைக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி எத்தனை அநியாங்களை செய்தார் சுமந்திரன். இதனை வாய் மூடி பார்ததுக் கொண்டிருந்த கூட்டமைப்பு எம்பிகளுக்கும் இது பொருந்தும்.

2016, பின்னர் 2017, பின்னர் 2018 என்றீர்களே? அந்த வாக்குறுதி எல்லாத் காற்றில் பறந்துவிட்டதா? இப்போது போதை தெளிந்தவனாய், ஞானம் பிறந்தவனாய் வருவது ஏதேனும் தேர்தலுக்காகவா? மாகாண சபைத் தேர்தல் வருகிறது என்று மீண்டும் வீரம் பேசப் போகிறீர்களா? கடந்த மாகாண சபைத் தேர்தலில் மேடைகளில் முழங்கிய முழக்கங்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மேடைகளில் முழங்கிய முழக்கங்கள் எல்லாம் எங்கள் செவிகளை விட்டு நீங்கவில்லை.

பாம்பு செட்டையை கழற்றுவதுபோல சிங்கள அரசுடன் உறவை முறித்துவிட்டு கள்ள உறவு வைக்கப் போகிறீர்களா? இனி நீங்கள் இராஜினா செய்தென்ன? செய்யாமல் விட்டென்ன? மணலாற்றுப் பக்கமாக வந்த சிங்களவன், இப்போது வடமராட்சி கிழக்கு வரை வந்திட்டான். நீங்கள் இராஜினாமா நாடகம் போடுகிறீர்கள். உங்களுக்கு தகுந்த பாடத்தை தமிழ் மக்கள் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்கள் மௌனமும் பதவி மோகமும் எங்கள் இனத்தை இராணுவமயமாக்குகின்றது.

விசுவமடுவில் இடமாற்றம் பெற்றுச் செல்லும் இராணுவ அதிகாரியை எங்கள் பெண்கள் கட்டிப் பிடித்து அழும் காட்சியை பார்த்துவிட்டும் எப்படி உணவு உண்டு உறங்க முடிகிறது. எங்கள் பெண்களை வேட்டையாடிய, எங்கள் மக்களை கொன்று குவித்த ஒருவனை எங்கள் மக்களே கட்டி அணைத்து அழுகிறார்கள். எங்கள் மாவீரர்களுக்கு செய்யப்பட்ட இந்த துரோகத்தை புரிந்தது. அவர்களல்ல. நீங்களே. இந்த மக்களின், முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்தீர்கள்.

சிங்கள இராணுவம் தன்னை நல்லவனாக காட்டி அந்த மக்களுக்கு வேலையை தந்து அவர்களை தன் வசப்படுத்தியுள்ளமைக்கு நீங்களே காரணம். தமிழீழம் சிங்கள இராணுவமயப்படுவதற்கு நீங்களே காரணம். தமிழ் இனமே வெட்கி தலைகுனிந்து நிற்பதற்கு நீங்களே காரணம். எல்லோருக்கும் ஒன்றுதான் வழி. மீண்டும் புலி வந்தால்தான் சரி. மீண்டும் நாம் புலியாக மாறுவதுதான் வழி. எங்கள் மண்ணை தமிழீழ மண்ணாக மீட்பதற்கு அதைத் தவிர வேறு வழி இருக்காது. நீங்கள் கடதாசிக் கத்திகள். நீங்கள் கடதாசித் தலைவர்கள்.

ஆசிரியர்.
11.06.2018

Leave A Reply

Your email address will not be published.