முன்னாள் மாமா கட்சி தொடங்குவதால் எந்தப் பிரச்னையும் இல்லை” -மன்னார்குடியில் தினகரன் கலகல

0

மன்னார்குடியில் திவாகரன் கட்சி பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்திய நிலையில் தினகரனும் இன்று மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனால் பரபரப்புடன் காணப்பட்டது மன்னார்குடி.

மன்னார்குடியில் தனது ஆதரவாளர்களின் புதுமனை புகுவிழா, திருமண நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழக அரசு காவிரி மட்டுமல்ல எந்த விஷயத்திலும் சரியாக செயல்படவில்லை. 110 விதியின் கீழ் தண்ணீர் திறக்க முடியாது என்று சொன்ன ஒரே முதல்வர் பழனிசாமி தான்.

மத்திய அரசின் கிளை அலுவலகமாக தமிழக அரசு உள்ளது. மத்திய அரசு தமிழகத்திடம் பாராமுகமாக செயல்படுகிறது. ஜெயலலிதா யாரிடமும் அழுது கோரிக்கை வைக்கமாட்டார். எங்களிடம் உள்ள 18 எம்எல்ஏ க்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள். அவர்கள் எப்போதும் எங்களுடனே இருப்பர், திமுகவுடன் கூட்டணி வைத்தால் எங்கள் தொண்டர்களே அதனை ஏற்க மாட்டார்கள்.

மாதிரி சட்டசபை சரியானதல்ல என்பதாலேயே திமுகவினர் மீண்டும் சட்டசபை வந்துள்ளனர். அடுத்த பிரதமர் யார் என்பதைத் தமிழக மக்களே தீர்மானிப்பார்கள். எஸ்.வி.சேகர் மீது உச்சநீதிமன்றமே கைது செய்ய வலியுறுத்திய பின்னரும் அவரைக் கைது செய்யாமல் இருப்பது பிஜேபியை பார்த்து தமிழக அரசு பயப்படுகிறது என தெளிவாக காட்டுகிறது.

அரசியல் ரீதியாகத் தொண்டர்களால் உருவாக்கப்பட்டது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். என்னுடைய முன்னாள் மாமா(திவாகரன்) கட்சி தொடங்குவதால் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அரசியல் என்பது வேறு உறவு என்பது வேறு. அற்பர்களுக்கு வாழ்வு வந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் யார் மீது வேண்டுமானால் வழக்கு போடலாம் என்ற பாணியில் தனியார் தொலைகாட்சி நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.