முல்லைத்தீவு மாவட்டம் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் அபாயம்!

வட. மாகாண கல்வி அமைச்சர் எச்சரிக்கை!

0

முல்லைத்தீவு மாவட்டம் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக வட. மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்வு இரண்டு அமர்வுகளாக நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதற்கு பெற்றோர்களின் பங்களிப்பு மிகமுக்கியமானது. கடந்த காலங்களில் கிராமப்புறப் பாடசாலைகளில் கல்வி கற்ற பலர் இன்று உயர் பதவிகளை வகித்து வருகின்றார்கள்.

ஆனால் இப்போது பலரும் நகர்ப்புறப் பாடசாலைகளை நோக்கி நகர்கின்றதை காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருமளவான தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் நல்ல பெறுபேற்;றைப் பெற்றிருக்கின்றார்கள். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக பாடசாலை தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. இதேபோன்று பூநகரி பாடசாலையும் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றது.

எனவே, நகர்புறங்களுக்கு நகர்வதை தவிர்த்து பிள்ளைகளை கிராமப்புறப் பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.