மூளைச் சலவையும் முந்நூறு ஏக்கரும்

0

வீர நிலத்தின் தருக்களை நாணலாக்கியவர் யார்
ஊர் கூடி உருகிய காலம் கரைந்து ஊருக்கொரு சாமி வந்தது ஏன்
அம்மணக் கோலம் தரித்து
அக்கினி குளித்த இனம்
முக்கனி படைத்து முக்கித் தக்கி
முண்டி அடித்து மூச்சிழக்க
தூக்குகுக் காவடியா
இல்லை மனிதக்காவடியா

சீச்சி வெட்கம்
ஆச்சியும் அப்புவும் எதிர்த்தது அப்புகாமியை
இன்று வந்த மாற்றம்
அப்பு சாமியாய்
செஞ்சோற்றுக்கடன் தீர்ப்பது குற்றமில்லை
நன்றி மறவாமை குற்றமில்லை
அதற்காக தலைகள் செருப்பாக முடியுமா
ஊனமிழந்த வீர குலமே
இது ஈரத்தின் குறியா
இல்லை சோரத்தின் நிலையா

போரென்றால் என்ன
போரில் வெல்வது யார்
போரில் போரே வெல்லும்
ஆயிரம் வேரறுந்தும்
பறவையின் எச்சத்தில் நுளைந்து
தன்னினத்தை பெருக்கும் விதையாய் வீரியம் கொள்ளும் தருக்களாய்
மாறும் நாளில்
நரம்புகள் அறுந்த
நாணல்களாய் சாஞ்சாடம்மா சாஞ்சாடு
கொழும்புக்கு போவோம் சாஞ்சாடு
என்பது எதற்கு

ராமனாதனை தேரில் இழுத்தார்கள்
பின் ஊரையே பறித்தார்கள் அது அன்று
நீங்கள் தோளில் தூக்கி பூவைத் தூவி கோளையாகினீர் அது இன்று

உங்கள் விளை நிலங்களைப் பறித்தார்கள்
சொந்த வீட்டை அடைத்தார்கள்
உறவுகளை காணாமல் ஆக்கினார்கள்
பண்ணைகளில் அடைத்தார்கள்
உழைக்கும் தந்தையை சிறையிட்டனர்
பின் உதவி என்ற போர்வையில் புத்தனாகினர்
உன் புத்தியை மத்திமமாக்கியவர் யார்
உனது பொருளாதாரத்தை உடைத்ததுயார்
யாதுமாகி வேகி நீ நின்றால்
உண்மையை அறிவது எப்போ
உயர்வை அணிவது எப்போ

விருந்தளித்தலும் புசித்தலும் உலக நியதி
உயர் தர்மம்
உண்டி தந்தவனும் குண்டு போட்டவனும் ஒன்றா அது என்ன தர்மம்
உண்டி தந்தவனை தூக்கல் என்றால்
அம்மாவைத் தூக்குங்கள்
ஆயிரம் வயிறு நிறைத்த உழவனைத் தூக்குங்கள்
ஏக்கங்கள் எரியும்
அக்கணமே அகலும் அனலான அவலம்

இது ஒரு உளவியல்ப்போர்
உண்மையின் படிகளில் வைக்காத சரணம் நாளை துண்டாடப்படும்
மண்டியிடல் மறமில்லை மனிதமும் இல்லை
நன்றி பகிர்தல் இப்படியுமில்லை

கொள்கைக்காக எரிந்த மண்ணில்
இன்று கொள்கையையே எரிப்போர் காண
வேகுது உள்ளம்
காலைக் கதிரவன் மாலை மறையலாம்
மறுநாள் வராமலா போவான்
0

-தவராசா செல்வா

Leave A Reply

Your email address will not be published.