யாழ். சுழிபுரத்தில் பாடசாலை மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தை பாடசாலை மாணவர்களும் பொது மக்களும் இணைந்து இன்று காலை முன்னெடுத்து இருந்தனர்.
இன்று காலை சுழிபுரம் சந்தியில் வீதிகளை மறித்து போராட்டத்தை ஆரம்பித்து “மாணவியின் கொலை தொடர்பில் அரசியல் வாதிகளோ கல்வித்துறை சார் அதிகாரிகளோ, சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளோ குரல் கொடுக்கவும் இல்லை, நடவடிக்கை எடுக்கவும் இல்லை” என குற்றம் சாட்டியுள்ளனர்.
கல்வி அமைச்சு உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தர வேண்டும்.
அவர்கள் வருகை தந்தாலே எமது போராட்டத்தை நிறுத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.