வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணம் காரணமாக நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட துயரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மறவன்புலவைச் சேர்ந்த 47 வயதான சிவராசா சிவரூபன் என்பவரே இவ்வாறான விபரீத முடிவால் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டுள்ளார் .வெளிநாட்டிலிருந்து பணம் வருவதால் மனைவி தன்னுடன் சந்தோசமாக இருப்பதில்லை என்று கடிதம் எழுதிவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
நான்கு பிள்ளைகளின் தந்தையான சிவரூபன் இவர் கொடிகாமம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணிபுரிகிறார்.சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணை நடத்தினர். பிரதேச திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மேலதிக விசாரணைகளை நடத்தினார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வெளிநாடுகளிலுள்ள உறவுகள் அனுப்பும் பணம் இங்குள்ள பலருக்கும் சாதகமாகவே அமைகின்ற போதும், சில இளையோர் அத்தகைய பணத்தால் தறிகெட்டுச் செல்கிறார்கள். சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட பலரும் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.