அடுத்த கிட்லர்: மகிந்த சொன்னால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்! கோத்தா
தமிழர்களும் எனக்கு வாக்களிப்பார்கள் என்கிறார் கோத்தா.
அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ளபேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
”சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நிறுத்தினால், நான் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்.எனது சகோதரர் பசில் ராஜபக்ச தேர்தலில் போட்டியிட மறுப்புத் தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் மக்களும் கூட இந்தமுறை எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். நான் பொது பலசேனாவின் ஆதரவாளர் என்ற தவறான கருத்து இப்போது பொய்யாகியுள்ளது.
எனவே, முஸ்லிம்கள் எனக்கு வாக்களிப்பார்கள். மகிந்த ராஜபக்சவுக்காக தமிழ் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள். நான் அதிபராக தெரிவு செய்யப்பட்டால், ஒவ்வொரு குடிமகனும், அமைதியாகவும், கௌரவமாகவும் வாழுகின்ற நிலையை உறுதி செய்வேன்.
தமிழர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், மகிந்த ராஜபக்ச தனது குடும்ப வட்டத்துக்குள் தமிழ் உறவுகளைக் கொண்டிருக்கிறார். போர் முடிவுக்கு வந்த பின்னர் அவர் வடக்கு, கிழக்கில் முக்கியமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.