எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் போட்டியிட மாட்டார் என இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் கூறி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “எதிர்வரும் மாகாண சபை தேர்தலை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்” என அந்த ஊடகம் கேள்வியெழுப்பியிருந்தது.இதற்கு பதிலளித்து பேசிய அவர்,“எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வேட்பாளராக இருக்க மாட்டார் என இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கூறி வருகின்றனர்.
எனினும், யார் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரையிலும் முடிவு செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வேட்பாளராக இருக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் நினைக்கிறார்கள்.
இதேநேரம், முதலமைச்சர் விக்னேஸ்வரன் மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு விலகுவதாக அவர் ஒருபோதும் சொல்லவில்லை.இந்நிலையில். வேட்பாளர் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பே தீர்மானிக்க வேண்டும். எவ்வாறாயினும், மாவை சேனாதிராஜாவும் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்” என அவர் கூறியுள்ளார்.