ஆதார் கார்டு இருந்தால் மட்டும் ஒருவர் இந்தியர் ஆகி விட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் திவ்யா என்பவர் சமீபத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தனது தாயார் ஜெயந்தி. இலங்கையில் பிறந்த இவர் அங்கு ஏற்பட்ட போரின் காரணமாக தமிழகத்திற்கு வந்துடன் இங்கு திருமணமும் செய்துள்ளார். மேலும் அவர் இந்தியர் என்பதற்கு ஆதாரமாக ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வைத்துள்ளார்.
ஆனால் பணி நிமித்தம் காரணமாக எனது தாயார் ஜெயந்தி அடிக்கடி இத்தாலி சென்று வருவார். அவ்வாறு கடந்த ஜூலை 1ம் தேதி இத்தாலி சென்று வரும்போது சட்டவிரோதமாக இந்தியா வந்துள்ளதாக கூறி எனது தாயாரை சென்னை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. அதில், ஜெயந்தி ஏற்கனவே இலங்கை பாஸ்போர்ட் பெற்றுள்ளார். ஆனால் 1994ம் ஆண்டு காலாவதி ஆகிவிட்டது. இதனை மறைத்து சட்டவிரோதமாக இந்தியாவில் பாஸ்போர்ட் பெற்றுள்ளார்” எனக் குற்றம் சாட்டப்பட்டது.
மத்திய அரசின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி டி.ராஜா, “ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை பெற்றுவிட்டால் மட்டும் ஒருவர் இந்திய குடியுரிமை பெற்றவராக ஆகிவிட முடியாது. சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் அங்கீகாரம் கொடுத்தால் மட்டுமே ஒரு இந்தியாராக இருக்க முடியும்” எனக்கூறி திவ்யா மனுவை தள்ளுபடி செய்தார்.