இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் செம்மணியில் மீண்டும் மனித எச்சங்கள் மீட்பு!

0

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் மனித மண்டை ஓடுகள் மற்றும் மனித எச்சங்கள் என்பன மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்மணிப் பகுதியில் நீர்தாங்கி ஒன்றை அமைக்கும் நோக்கில் பெக்கோ இயந்திரம் மூலம் நிலத்தை அகழ்ந்த போதே இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

1998 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகளின் எலும்புக்கூடுகள் செம்மணியில் மீட்கப்பட்டது. செம்மணியின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள் மூலம் பதினைந்து பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.

இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கிருசாந்தி ராமசாமியின் மரணத்துடன் செம்மணிப்படுகொலை அம்பலமானது. கிருசாந்தி, கொலை குற்றவாளி சோமரத்ன ராஜபக்சவின் ஒப்புதல் வாக்குமூலத்தில் செம்மணிப்படுகொலை முற்று முழுதாக அன்று வெளிச்சமானது.

இதேவேளை தற்போது மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் யாழ் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுடன் எலும்புக்கூடுகளை மீட்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன் அங்கு மேலும் மனிதப் படுகொலை எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அரியாலை, கொழும்புத்துறை, குருநகர் முதலிய பகுதிகளில் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்கள் செம்மணியில் புதைக்கப்பட்டதாக வழக்கு ஒன்று 18 ஆண்டுகளின் முன்னர் பதிவு செய்யப்பட்டது. எனினும் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. .

Leave A Reply

Your email address will not be published.