உலக கோப்பை மகளிர் ஹாக்கி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து மோதல்

0

16 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய அணி இன்றைய தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்துடன் மோதுகிறது. #WomensHockeyWorldCup

உலக கோப்பை மகளிர் ஹாக்கி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து மோதல்
லண்டன்:

14-வது உலக கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டி லண்டனில் இன்று (21-ந்தேதி) தொடங்குகிறது. ஆகஸ்டு 5-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்தியா ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் நெதர்லாந்து, தென் கொரியா, இத்தாலி, சீனா அணிகளும், ‘சி’ பிரிவில் அர்ஜென்டினா, ஜெர்மனி, ஸ்பெயின், தென் ஆப்பிரிக்கா அணிகளும், ‘டி’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், பெல்ஜியம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

‘லீக்‘ முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெறும். மற்ற 4 அணிகளும் ‘பிளே ஆப்’ சுற்று மூலம் தேர்வு பெறும். ஒவ்வொரு பிரிவிலும் 2-வது, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். 8 அணிகள் பிளே ஆப் சுற்றில் ஆடும்.

இந்திய அணி இன்றைய தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் ஹாக்கி அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்கா- அயர்லாந்து மோதுகின்றன.

உலக கோப்பை மகளிர் ஹாக்கியில் விளையாடும் இந்திய அணி விவரம்:

கோல் கீப்பர்கள் சவிதா, ரஞ்சனி.

சுனிதா லக்ரா, தீப்கிரேஸ், தீபிகா, குர்ஜித்கபூர், ரீனா கோக்கர்.

நடுகளம்: நமீதா டாபோ, லிலிமா மின்ஸ், மோனிகா, நேகா கோயல், நவ்ஜோத்கபூர், நிக்கி பிரதான்.

முன்களம்: ராணி ராம்பால் (கேப்டன்), வந்தனா, நவ்நீத் கவூர், லால் ரேம் ஷிமி, உதிதா,

உலக கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் நெதர்லாந்து அதிகபட்சமாக 7 முறை (1974, 1978, 1983, 1986, 1990, 2006, 2014) சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

அர்ஜென்டினா (2002, 2010, ஆஸ்திரேலியா (1994, 1998), ஜெர்மனி (1976, 1981) ஆகிய அணிகள் தலா 2 முறை உலக கோப்பையை வென்றுள்ளன.

இந்திய அணி 1974-ம் ஆண்டு 4-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாகும். #WomensHockeyWorldCup

Leave A Reply

Your email address will not be published.