கலங்கிய கண்களுடன் சென்னைக்குப் புறப்பட்டார் அழகிரி!

0

கலங்கிய விழிகளுடன் கலக்கமான இதயத்துடன் கருணாநிதியைக் காண இன்று அதிகாலையில் சென்னைக்குப் புறப்பட்டார் மகன் அழகிரி.

உடல் நலிவு பெற்றுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த இரண்டு நாள்களாக காய்ச்சல், சிறுநீரகத் தொற்று பாதிப்பால் உடல் நலம் மிகவும் குன்றி சென்னை கோபாலபுர இல்லத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நன்கு கவனித்துக்கொள்ள மருத்துவர்கள் குழு 24 மணி நேரமும் அங்கு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், கருணாநிதியைப் பார்க்க பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் நேற்று மாலை முதல் கோபாலபுரம் வந்து கொண்டிருக்கின்றனர். துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். உட்பட அமைச்சர்களும் வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். இந்த நிலையில், அவரைப் பார்க்க மதுரையில் வசிக்கும் மு.க.அழகிரி ஏன் இன்னும் வரவில்லை என்ற கேள்வியை பலரும் கேட்டு வந்தனர். தந்தையின் உடல் நிலை பற்றி தொடர்ந்து உறவினர்களுடன் விசாரித்து வந்த அழகிரி, நேற்று இரவுக்கு மேல் வந்த தகவலால் கலங்கிப் போனார்.

உடனே சென்னைக்குப் புறப்படத் தயாரானபோது, இரவு நேர கடைசி விமானமும் போய்விட்ட சூழலால் காரில் செல்ல முடிவுசெய்தார். ‘இரவு நேர அவசரப்பயணம் வேண்டாம்’ காலையில் கிளம்புங்கள்’ என்று உறவினர்கள் கூறியதால் இரவுப்பயணத்தை ஒத்தி வைத்து இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னைக்குப் புறப்பட்டார். அவருடன் ஆதரவாளர்கள் பி.எம்.மன்னன், உதயகுமார், கோபிநாதன், எம்.எல்.ராஜ் ஆகியோரும் வருகின்றனர். காலை 11 மணிக்குள் கோபாலபுரத்துக்குச் சென்று விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இரவு முழுவதும் தூங்காமல் கருணாநிதியை நினைத்து அழகிரி கலங்கிக் கொண்டிருந்ததாக அவருடைய ஆதரவாளர்கள் கூறினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.