பத்து ஆண்டுகள் காட்டாட்சி செய்த ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து கோத்தபாயா அடுத்த சனாதிபதியா?

0

இன அழிப்புக்காலத்தில், இராஜபக்சகுடும்பத்தின் மும்மூர்த்திகளாக விளங்கியமகிந்த, பசில், மற்றும் கோத்தபாயவின்வல்லரசுகளைக் கையாளும் உத்தி,சிங்களத்திற்கு வெற்றியைத் தேடித் தந்தது.

பசில் டெல்லியோடும், பச்சைகாட்டைபெற்ற கோத்தா அமெரிக்காவோடும்,மகிந்தா சீனாவோடும் தமது நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

பெரியதொரு இனவழிப்பும் இவர்களின்துணையோடு நடந்து முடிந்துவிட்டது.

இந்த நிலையில் இலங்கையில் அடுத்த சனாதிபதி தேர்தல் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால் தேர்தல் களத்தில் இறங்க இப்போதே ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. இதில் மூன்று பேர்களது பெயர்கள் அடிபடுகின்றன.

இப்போதுள்ள சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மீண்டும் போட்டியிடுவார் என்று அவரது கட்சியில் உள்ள அமைச்சர்கள் சொல்கிறார்கள். அதே போல் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் சிலர் பிரதமர் இரணில் விக்கிரமசிங்காதான் தங்கள் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் என உறுதிபடக் கூறுகிறார்கள். இந்த இருவரைத் தவிர மூன்றாவதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக்சா அவர்களின் உடன்பிறப்புமான கோத்தபாய இராசபக்சாவும் களம் இறங்கியுள்ளார்.

கோத்தபாய தேர்தலில் போட்டியிடுவதற்குப் பெரிய தடைக் கல்லாக இருப்பது அவரது இரட்டைக் குடியுரிமை. 1992 இல் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற கோத்தபாய அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். பின்னர் அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றார். 2005 இல் நாடு திரும்பிய கோத்தபாய இலங்கைக் குடியுரிமையைப் பெற்றார்.

“நான் சனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது நிச்சயமானால் அமெரிக்க குடியுரிமையை இரண்டு மாதத்தில் துறந்துவிடுவேன்” எனக் கூறுகிறார். ஆனால் அவர் நினைப்பது போல அது எளிதாக இருக்க மாட்டாது என அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

கோத்தபாயாவுக்கு எதிரான மனிதவுரிமை மீறல்கள், இலஞ்சம் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருகின்றன.

இதில் வியப்பு என்னவென்றால் நாட்டைக் கொள்ளை அடித்து உலையில் போட்ட இராசபக்சா குடும்பத்தைச் சார்ந்த ஒருவரே தேர்தலில் பேட்டியிட்டு அடுத்த சனாதிபதியாக வர முயற்சிக்கிறார்.

கோத்தபாய தான் போட்டியிடுவதற்கு ஒரேயொரு தக்கு மட்டும் வைத்திருக்கிறார். அது தனது அண்ணன் முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக்சாவின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிடப் போவதாகச் சொல்கிறார்.

கோத்தபாய தனது அரசியல் படிமத்தைத் துலக்குவதற்கு இரண்டு அமைப்புகளை உருவாக்கியுள்ளார். ஒன்று எலியா (வெளிச்சம்) மற்றது விஜயத் மகா (அறிவாளிகளின் பாதை) என்பதே அந்த இரண்டு அமைப்புகளாகும். இதில் விஜயத் மகா கடந்த மே 13,Shangri-La Hotel, கொழும்பு என்ற 5 நட்சத்திர ஹோட்டலில் நடத்திய அதன் முதலாவது ஆண்டு மாநாட்டில் கோத்தபாயா அறிவால் மிகுந்த இலங்கைக்குத் தேவையான இலட்சிய நோக்கின் அவசியம் (THE NEED FOR AN ACTIONABLE VISION FOR SRI LANKA) என்ற தலைப்பில் முக்கிய உரையாற்றினார். இந்த மாநாட்டில் மகிந்த இராசபக்சா உட்படச் சுமார் 2,000 பேர் கலந்து கெண்டார்கள். மாநாட்டின் முடிவில் எல்லோருக்கும் இரவு விருந்து அளிக்கப்பட்டது. கொழுப்பில் நடந்த மாநாட்டை அடுத்துப் பதுளை போன்ற நகரங்களிலும் மாநாடுகள் நடத்தப்பட்டன.

இதனை எழுதும்வரை கோத்தபாயாவை சனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்தா இன்னமும் பச்சைக் கொடி காட்டவில்லை. சனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யக் காலம் இருக்கிறது. அப்பேது பார்க்கலாம் என மகிந்தா இராசபக்சா சொல்லி வருகிறார். கோத்தபாயாவை சனாதிபதி வேட்பாளராக நிறுத்த மகிந்தாவுக்கு உள்ளுர விருப்பமில்லை எனச் சிலர் நினைக்கிறார்கள். ஒருவேளை தனது வாரிசான இளவரசர் நாமலுக்கு முடி சூட்ட மகிந்தா விரும்பலாம். எது எப்படியிருப்பினும் இராசபக்சா குடும்பத்தில் சனாதிபதி வேட்பாளரைச் தெரிவு செய்வதில் கருத்து வேற்றுமை நிலவுவதாகத் தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.