பிரேத பரிசோதனைக்காக தாய் உடலை 38 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்ற வாலிபர்

0

மத்திய பிரதேசத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த தாயின் உடலை வாலிபர் பிரேத பரிசோதனைக்காக 38 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் கட்டி ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக தாய் உடலை 38 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்ற வாலிபர்
ஜெய்ப்பூர்:

மத்தியபிரதேச மாநிலம் திகாம்கர் மாவட்டத்தில் உள்ள மஸ்தாபூர் என்ற ஊரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது தாயார் குன்வார் பாய்.

சம்பவத்தன்று வீட்டுக்கு வெளியே சென்ற போது, குன்வார் பாயை பாம்பு கடித்து விட்டது. அவரை பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். ஆனால், சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார்.

இதுதொடர்பாக ராஜேஷ் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அவரிடம் குன்வார்பாய் உடலை திகாம்கரில் உள்ள மாவட்ட ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரும்படி கூறினார்கள்.

ஆனால், உடலை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்ல போலீசார் வாகன வசதி செய்து தர மறுத்து விட்டனர். ராஜேசிடம் வாகன வசதி செய்வதற்கு போதிய பணமும் இல்லை.

இதனால் வேறு வழியில்லாமல் குன்வார்பாய் உடலை தனது மோட்டார் சைக்கிளின் பின்பக்கம் கட்டி வைத்து திகாம்கர் ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றார்.

அவரது ஊரில் இருந்து திகாம்கர் 35 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. அவ்வளவு தூரத்துக்கு பிணத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றதை பலரும் வேடிக்கை பார்த்தனர்.

சிலர் இந்த காட்சிகளை செல்போனில் பதிவு செய்து இணைய தளத்தில் வெளியிட்டனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் அபிஜித் அகர்வால் கூறும்போது, 108 ஆம்புலன்சுக்கு அவர் தகவல் கொடுத்திருந்தால் ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்து இருப்போம்.

அது போன்ற எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. ஆனாலும், பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடலை ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம் என்று கூறினார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தில் பணம் கொடுத்து வாகன வசதி செய்ய வழி இல்லாததால் தொழிலாளி ஒருவர் இறந்த தனது மனைவியின் உடலை பல கி.மீட்டர் தூரம் சுமந்து சென்ற சம்பவம் நடந்தது.

இதேபோல் வாகன வசதி கிடைக்காமல் சைக்கிளிலும், மோட்டார் சைக்கிளிலும் பிணத்தை ஏற்றி செல்லும் அவலநிலை பல மாநிலங்களிலும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.