புலிக் கொடி பறந்த யாழ் கோட்டையில் இராணுவத்தினருக்கு காணியா?

0

யாழ்.கோட்டை என்றும் தமிழர்களை அடிமைப்படுத்திய ஒரு வரலாற்றுச் சின்னமாகவே பார்க்கப்பட்டது. அந்தவகையில் அதின் ஒரு பகுதி மீண்டும் இராணுவத்தினரின் பயன்பாட்டு வழங்கப்பட்டது எமது இனத்தை அடிமைப்படுத்திய ஒரு வரலாற்றுச் சின்னத்தை மீண்டும் புத்துயிர் பெறவைக்கும் செயற்பாடாகவே கருதப்பட வேண்டியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் யாழ்.பண்ணைக்கடற்கரையில் பொதுமக்கள் தமது வாகனங்களை நிறுத்துவற்கு வசதியாக யாழ்.கோட்டையின் பின்புறமுள்ள சிறிய இடப்பரப்பை யாழ்.மாநகரசபை பொதுமக்களின் பாவனைக்காக தொல்பொருளியல் திணைக்களத்திடம் கோரியது. ஆனால் அது எமது காணி அதை உங்களுக்கு தரமுடியாது என்று கூறியது மட்டுமின்றி குறித்த பகுதிக்குள் எந்த வாகனங்களும் உட்செல்லமுடியாதவாறு பாதையை மூடிவிட்டார்கள்.

தொல்பொருளியல் திணைக்களகத்திற்கு சொந்தமான காணியில் பொதுமக்கள் தமது வாகனத்தை கூட நிறுத்த அனுமதி தர மறுகின்ற நிலையில் தற்போது அதன் ஒரு பகுதியை இராணுவத்தினரின் பயன்பாட்டு வழங்கப்பட்டது நியாயமா? என்ற கேள்வி எழுகின்றது. ஆக தொல்பொருளியல் திணைக்களம் தனது இலட்சினையில் உள்ளது போல் பௌத்த மேலாதிக்க சிந்தனையை கொண்டு செயற்படுகின்றது என்பது வெளிப்படை.

எமது தாயகப் பிரதேசங்களில் இருந்து இராணுவத்தினர் விலகவேண்டும் என்ற மக்களின் கோரிக்கை வடக்கு மாகாணசபையிலும், யாழ்மாநகர சபையிலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. ஆனால் அதை செயற்படுத்த முடியாமல் உள்ளது. அதற்கு காரணம் அதற்குரிய அதிகாரங்கள் இல்லை.

மாறாக மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு திணைக்களத்தின் அனுமதியுடன் தமிழர் தாயகத்தில் இராணுவமேலாதிக்கம் மற்றும் பௌத்த மேலாதிக்கம் நிறுவப்படுகின்றது.

ஆக மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள தொல்பொருளியல் திணைக்களத்திற்கு இருக்கின்ற அதிகாரம் கூட மக்களால் தெரிவு செய்யப்பட்ட இச் சபைகளுக்கு இல்லை என்பது வெளிப்படை.

நாளை இச் செயல் பற்றி சபையில் கேள்வி எழுப்பாலம். நாங்கள் அழைக்கவில்லை அவர்களாகவே மரங்களை நட்டார்கள் என்று கூறியது போல் அவர்களுடைய காணியில் அவர்கள் முகாம் அமைக்கின்றார்கள் எம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதே பதிலாக வரும்.

எனவே எமக்கான அதிகாரங்கள் எமக்குத் தரும் வரையில் நாம் தொடர்ந்தும் இவ் மண்ணில் அரகேற்றப்படும் அனைத்து விதமான ஆக்கிரமிப்புக்களையும் அடக்குமுறைகளையும் ஜீரணித்துக் கொண்டு வாழும் அரசியல்

அடிமைக்களாகவே இருப்போம் என்பது திண்ணம்.

ஒரு இனத்தின் உரிமைப்போராட்டத்தினை நசுக்குபவர்கள் , நில ஆக்கிரபிப்பினை செய்பவர்கள் அதனை சட்டம், ஒழுங்கு, அதிகாரம் என்ற பெயரிலேயே செய்கின்றனர் என்பதற்கு யாழ்.கோட்டைப் பகுதியை இராணுவத்தினருக்கு வழங்கிய செயலும் பொருந்தும் என்பது வெளிப்படை

அந்தவகையில் மீண்டும் யாழ்.நகரை இராணுவமேலாதிக்கத்தின் கீழ் முழுமையாக கொண்டும் வரும் திட்டமிட்ட இச் செயற்பாடு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

வரதராஜன் பார்த்திபன்

யாழ்.மாநகர சபை உறுப்பினர்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

Leave A Reply

Your email address will not be published.