பேஸ்புக்கிலும் உண்மையான காதல் ! காதலன் காதலி இருவரும் உயிரை விட்ட துயரச்சம்பவம்

0

தமிழகத்தில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் தென்னவன்(24). திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வரும் இவர், சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த, சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கவிதா என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தவர்கள், நாளடைவில் காதலர்களாக மாறினர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 2ம் திகதி கவிதாவிற்கு பிறந்த நாள் என்பதால் ஒரு விழா நடத்தப்பட்டுள்ளது. அந்த விழாவில் தென்னவன் பங்கேற்றுள்ளார். அப்போது தென்னவனை பெற்றோரிடம் கவிதா தன்னுடைய நண்பர் என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து கடந்த மே மாதம் 3ம் திகதி கவிதாவின் பெற்றோர், கேரளா மாநிலம் பாலக்காட்டுக்கு தாத்தாவின் துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளனர். இதையடுத்து கவிதா தன்னுடைய காதலன் தென்னவனை வீட்டிற்கு வரும் படி அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த நேரத்தில் தென்னவனுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தென்னவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்த தென்னவனின் தந்தை ரவிச்சந்திரன் காவல்நிலையத்தில் தன் மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகார் மனு அளித்திருந்தார்.

இதனால் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். காதலன் இறந்த துக்கத்தில் மனம் உடைந்து காணப்பட்ட கவிதாவை திருவொற்றியூர் சக்திபுரத்தில் உள்ள உறவினர் ராமச்சந்திரன் என்பவரது வீட்டில் பெற்றோர் தங்க வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த கவிதா, யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலன் இறந்த துக்கம் தாங்காமல் கவிதா தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.