போரின் வடுக்களைப் பொதுவெளியில் புரிய வைக்கும் காண்பியக்கலை கண்காட்சி

0

போரின் வடுக்களைப் பொது வெளியில் புரிய வைக்கும் காண்பியக்கலை கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 15.07.2018 காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள பன்குடாவெளியில் இடம்பெறவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி சிவஞானம் ஜெயசங்கர் தெரிவித்தார்.

பன்குடாவெளியில் ஆளரவமற்றும் சிதிலமடைந்தும்; வெளவால்களின் இருப்பிடமாகவும், பட்டிகள் களைப்பாறும் இடமாகவும் அமைந்திருக்கும் கண்ணாடிப்போடியார் இல்லத்தில் ஓவியர் சுசிமன் நிர்மலவாசனது காண்பியக் காட்சிப்படுத்தல்கள் நிகழ்த்தப்படவிருப்பதால் அதனைப் பார்வையிட வருமாறு ஆர்வலர்களுக்கு பொது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஓவியர் சுசிமன் நிர்மலவாசன் குறிப்பிடும்போது

‘இராணுவத்தினர் சுற்றிவளைப்பிற்காக ஊருக்குள் வரும் செய்தி வேலிகளுக்கூடாக ஊர் முழுக்கப்பரவும். ஊர் ஆற்றைக்கடந்து நரிப்புல் தோட்டத்திற்கு ஓடும், சில சந்தர்ப்பங்களில் சிறுவர்களும் பெண்களும்; கண்ணாடிப்பெரியப்பா வீட்டிலோ, கோவிலிலோ ஒன்றுசேர பெரும்பாலான ஆண்கள் ஊரைவிட்டு ஒடுவார்கள். வேலைக்குப்போன பெரியமாமா அப்படி ஓடியபோது தான் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கி ரவைகளில் இருந்து சிறுவர்கள் எங்களை பாதுகாக்க கண்ணாடிப்பெரியப்பாவின் பெரிய கட்டிலின்கீழ் அனுப்புவார்கள். மாமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் அவரும் எங்கள்கூட அனுப்பப்பட்டார். நாங்கள் கட்டிலின்கீழ் விழித்துக்கொண்டிருக்க கட்டில் எங்கள்மேல் தூங்கிக்கொண்டிருக்கும். சுற்றிவளைப்பின் போது அழைத்துச் செல்லப்படும் ஆண்களும் பெண்களும் தலையாட்டி பொம்மை முன்பாக நிறுத்தப்படுவார்கள், சின்ன மாமாவை பார்த்து தலையாட்டி பொம்மை தலையாட்டியதால் மாமா கைது செய்யப்பட்டார் அம்மாவும் மாமியும் முகாமின் முன்பாக நின்று அழுது அவரை விடுவிக்கப்பண்ணினார்கள். அவர் ஏற்கனவே நண்பர்களுடன் வீதியில் நின்றமைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பூசா சிறைச்சாலைவரை சென்றுவந்தவர்.

இவ்வாறு என்னைச் சுற்றியிருந்த யுத்தமே எனது ஓவிய கருப்பொருளாக இருந்து வருகிறது. கலைப்படைப்பின் கருத்தியலுடன் தொடர்புடைய இடங்களில் அக்கலைப்படைப்புக்கள் காட்சிப்படுத்தும்போது அதன் அர்த்தம் இன்னும் மிகுதியாகும் எனும் எண்ணம் 2003ல் எனக்கு உருவானது. ஆனாலும் 2018ல் அது சாத்தியமாகிறது.’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.