யாழ்ப்பாணம் கல்லுண்டாய்ப் பகுதியில் கூரிய வாள் மற்றும் இரும்புக் கம்பியுடன் பயணித்த நால்வர் நேற்றிரவு(10) கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய்ப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் கல்லுண்டாய்ப் பகுதியில் மானிப்பாய்ப் பொலிஸார் நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது இரு மோட்டார்ச் சைக்கிள்களில் நான்கு பேர் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்தனர்.
இதனையடுத்துக் குறித்த நால்வரையும் இடைமறித்துச் சோதனையிட்ட போது அவர்கள் கூரிய வாள் மற்றும் இரும்புக் கம்பி என்பவற்றை மறைத்துத் தம்முடன் எடுத்துச் சென்றமை கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுத் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.