வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான ஆசிரிய நியமனம் எதிர்வரும் முதலாம் திகதி புதன்கிழமை வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“வடக்கு மாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களிலும் இருக்கும் பாடசாலைகளில் தமிழ், குடியியல், வரலாறு மற்றும் தகவல் தொழில்நுட்பம், இரண்டாம் மொழி சிங்களம் போன்ற பாடங்களில் நிலவும் 353 வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் பட்டதாரிகளிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு எழுத்துப் பரீட்சைகள் இடம்பெற்றன.
இரு வினாத் தாள்களிலும் 40 புள்ளிகள் வீதம் 80 புள்ளிகளுக்கு அதிகமாகப் பெற்ற பட்டதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
எழுத்துப் பரீட்சையில் ஒரு பாடத்தில் 40 புள்ளிகளுக்கு குறைவாகப் பெற்று இரண்டாம் வினாத்தாளில் அதிக புள்ளியை பெற்று 80 புள்ளிகளைத் தாண்டினாலும் அவர்கள் சித்தி எய்தியதாகக் கணிக்கப்படமாட்டார்கள்.
353 பேர் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் புதன்கிழமை வழங்கப்படவுள்ளது.
நியமிக்கப்படும் ஆசிரியர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுப் பகுதி, வடமராட்சி கிழக்கு, வன்னிப் பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கே நியமனம் செய்யப்படுவார்கள்
என்றுள்ளது.