முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மாற்று தலைமையிலான அரசியல் தலைமைத்துவத்தையே மக்கள் விரும்புவதாக வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
வட தமிழீழம், மன்னாரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“பல கட்சிகளும் மக்களும் அமைப்புக்களும் அடுத்த மாகாண சபை தேர்தலின் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சராக களமிறங்க வேண்டும் என்றும், முதலமைச்சர் ஒரு மாற்று தலைமையிலான ஒரு அரசியல் தலைமைத்துவத்தை பெறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களுடனும் விருப்பத்துடனும் இருக்கின்றார்கள்.
நான் செல்கின்ற இடம் எல்லாம் துப்பாக்கி விவகாரம் தொடர்பில் என்னிடம் கேட்கப்படுகின்றது. ஆயுதத்திற்கு விண்ணப்பிப்பது வேறு. அதனை கையில் வைத்திருப்பது வேறு. ஆனால் அந்த விளக்கங்கள் தெரியாது விவாத பிரதி வாதங்கள் எழுந்து கொண்டிருக்கின்றது.
இதன் அடிப்படையில் கடந்த சபை அமர்வில் அவைத்தலைவரிடம் கேட்டிருக்கின்றேன் பாதுகாப்பு அமைச்சு எனக்கு ஆயுதத்தை கையளித்திருந்தால் அதற்கான அனுமதிப்பத்திரம் தொடர்பான பத்திரங்களை சபையிலே வைத்து சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து முடிவுக்கு வந்திருக்கின்றது.
திட்டமிட்ட வகையில் அடுத்த மாகாண சபை தேர்தல் வருகின்ற போது எனக்கு மக்கள் மத்தியில் இருக்கின்ற நன் மதிப்பை குறைப்பதற்காகவும், மறை முகமாக எனக்கு ஓர் உயிர் ஆபத்தை ஏற்படுத்தவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு விவாதம்.
தற்போது கொண்டு வருகின்ற பிரச்சினையும், முதலமைச்சருக்கு ஆதரவாக செயல்படுகின்ற, முதலமைச்சருக்கு அதிக படியான வாக்குகளை பெற்றுக்கொண்ட பெண் என்ற வகையில் என் மீது சரமாரியாக தாக்குதல்களை அவர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்” என கூறினார்.