விஜயகாலவிற்கு ஆதரவாக களமிறங்கிய அமைச்சர் மனோ

0

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருக்க வேண்டும் அவரை அவசரப்பட்டு கொன்று புதைத்து விட்டோம் என கூறிய ஞானசார தேரரை விடுத்து, விஜயகாலவை விமர்சிப்பது ஏன் என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நல்லவவர், வல்லவர், அவரை நாம் அவசரப்பட்டு கொன்று புதைத்து விட்டோம். உண்மையில் அவர் இன்னமும் உயிருடன் இருந்திருக்க வேண்டும். இன்று இந்நாட்டில் உள்ள பல பிரபல சிங்கள அரசியல் தலைவர்களை விட பிரபாகரன் சிறந்தவர்.

பிரபாகரன் கொண்ட கொள்கையில் நேர்மையாக இருந்தார். இன்றுள்ள பல சிங்கள அரசியல்வாதிகள், கொண்ட கொள்கைக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்பவர்கள் என்று சொன்னது யார்? மனோ கணேசனோ, விஜகலாவோ அல்ல.

இந்த கருத்தை பகிரங்கமாக ஊடகங்களின் முன் நேரடியாக என்னிடம் பொதுபல சேனை பொது செயலர் ஞானசார தேரர், என் அமைச்சுக்கு வந்து சொன்னார்.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் உடைந்து நொருங்கியுள்ள சட்டம், ஒழுங்கு நிலைமையை கண்டித்து ஒரு யாழ் மாவட்ட எம்பியாக, ஒரு தாயாக, ஒரு சகோதரியாக தன் கோபத்தை வெளிப்படுத்திய விஜகலா மகேஸ்வரனை மட்டும் பிடித்துக்கொண்டு விமர்சிப்பது ஏன்?

புலிகள் இயக்கம் தடை செய்யபட்டுள்ளதால், அதைப்பற்றி விஜயகலா பேசுவது சட்டவிரோதம் என கூறலாம். அப்படியானால், அன்று ஞானசாரர் என்னிடம் கூறியதும் சட்ட விரோதம் அல்லவா?

உண்மையில் விஜயகலா தன் கருத்தை சொல்வதற்கு சரியான சொற்களை பயன்படுத்த தவறி இருக்கலாம். ஒரு ராஜாங்க அமைச்சரான அவரது கருத்தில் உரிய முதிர்ச்சி இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், விஜயகலாவின் கோபம் மிகவும் நியாயமானது. உண்மையில் யாழில் சட்டம் ஒழுங்கு உடைந்து நொறுங்கி போயுள்ளது. சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வல்லுறவுக்கு மனித மிருகங்களால் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். நடைபெற்ற பாலியல் சம்பவங்கள் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.

நேற்று நாடு திரும்பிய நான், இன்று யாழ்ப்பாணம் சென்று நகரின் மத்தியில் நடு வீதியை மறைத்து அமர்ந்து முழுநாள் உபவாசம் செய்து, முழு நாட்டின் தேசிய அவதானத்தை யாழ் மாவட்டத்தில் இன்று முழுமையாக சீர் குலைந்து போயுள்ள சட்டம் ஒழுங்கு நிலைமையை நோக்கி கொண்டு வர விரும்பினேன். ஆனால், வேலைப்பளு காரணமாக நான் அதை செய்யவில்லை.

உண்மையில், இன்று யாழில் சட்டம், ஒழுங்கு சீரழிந்து உள்ளது என்பது அப்பட்டமான உண்மை. சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வல்லுறவுக்கு மனித மிருகங்களால் உள்ளாக்கபட்டுள்ளார்கள். இந்த மிருகங்களை இரும்பு கரம் கொண்டு அடக்க பொலிஸ் துறை தவறி விட்டது.

யாழ் மாவட்ட அரசியல் தலைவர்களும், தெருவில் இறங்கி தம் எதிர்ப்பை வெளிபடுத்தி ஒரு மக்கள் எதிர்ப்பு இயக்கத்தை நடத்தி இருக்க வேண்டும். பொலிஸ் செய்யட்டும் என பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. தொழிற்படாத பொலிசை தொழிற்பட வைக்க வேண்டும்.

இதன்மூலம் ராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் கருத்தை விட்டுவிட்டு, யாழ் மாவட்ட சட்டம், ஒழுங்கு சீரழிவே இன்று தேசிய பேசுபொருளாக மாறி இருக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.