ஸ்பெயினுக்கு பெயின்ட் அடித்து முதல் முறையாக காலிறுதியில் கால் வைத்தது ரஷ்சியா

0

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 16 அணிகள் நாக் அவுட் சுற்றில் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.

இன்று இடம்பெற்ற போட்டியில் ரஷ்சியா மற்றும் முன்னாள் உலக சாம்பியன் ஸ்பெயின் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின . இந்த உலகக் கோப்பையில் மிகவும் போரான ஆட்டமாக அமைந்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் பெனால்டி ஷூட்அவுட் மூலம் முடிவு ஏற்படும் நிலைக்கு ஸ்பெயினை இழுத்துச் சென்று 4-3 என்ற கோல் கணக்கில் ரஷ்யா வென்றது. இதன் மூலம் முதல் முறையாக உலகக் கோப்பையின் காலிறுதிக்கு ரஷ்யா முன்னேறியது.

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நேற்று துவங்கின. நேற்று நடந்த ஆட்டங்களில் அர்ஜென்டினாவை 4-3 என வென்று பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகலை 2-1 என வென்று உருகுவே ஆகியவை காலிறுதிக்கு முன்னேறின.

இந்த உலகக் கோப்பையில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த ரஷ்யா 3ல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்தது. முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என வென்று அசத்தியது. அடுத்தது சலாவின் எகிப்தை 3-1 என்று வென்றது. உருகுவேயிடம் 3-0 என தோல்வியடைந்தது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்பெயின் 3ல் ஒரு வெற்றி, 2 டிரா பெற்றது. ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் போர்ச்சுக்கல்லுடன் 3-3 என டிரா செய்தது. ஈரானை 1-0 என்று வென்றது. மொராக்கோவுடன் 2-2 என டிரா செய்தது.

15வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் ஸ்பெயின் 2010ல் கோப்பையை வென்றது. இரண்டாவது முறையாக காலிறுதி முன்னேறும் முனைப்பில் களமிறங்கியது. அதே நேரத்தில் ரஷ்யா முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்கியது

இன்று நடந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலேயே பந்து அதிக நேரம் இருந்தது. அதே நேரத்தில் ரஷ்யா கோலடிக்க விடாமல் தடுத்தது. 12வது நிமிடத்தில் செர்ஜியோ இக்னாஷ்விச் சேம் சைடு கோல் அடிக்க, 1-0 என ஸ்பெயின் முன்னிலை பெற்றது. 41வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரஷ்யாவின் டிஜூபா கோலாக்கினார். அதையடுத்து 1-1 என சமநிலை உருவானது. ஆட்ட நேர முடிவில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.

அதையடுத்து, 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுலும் முடிவு எட்டாததால், பெனால்டி ஷூட்அவுட் கொடுக்கப்பட்டது. அதில் ஸ்பெயினின் ஆன்ட்ரே இனியஸ்டா, ஜெரார்ட் பிக், செர்ஜியோ ராமோஸ் ஆகியோர் கோலடித்தனர். கோகோ, ஆஸ்பாஸ் கோலடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். ரஷ்யாவின் பெடார் ஸ்மோலோவ், செர்ஜி இக்னஷேவிச், அலெக்சாண்டர் கோலோவின், டெனிஸ் செரிஷெவ் கோலடித்தனர். அதையடுத்து 4-3 என பெனால்டி ஷூட்அவுட்டில் வென்று, ரஷ்யா முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறியது.

Leave A Reply

Your email address will not be published.