அராலியில் மோதிய குள்ளர்கள் இருவர்!

0

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனுக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனுக்கும் இடையே வட்டுக்கோட்டை அராலியில் இன்று பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் அராலி உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் மக்களைப் பீதிக்குள்ளாக்கும் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் சிவில் பாதுகாப்புக் கூட்டம் அராலி சிறி முத்துமாரி அம்மன் ஆலய சூழலில் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனைக் கண்டவுடன், அவரது அருகில் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் சீறிப் பாய்ந்தார்.

“குள்ள மனிதர்களின் நடமாட்டம் இல்லை என நீர் கச்சேரியில் நடந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளீர். நீர் எவ்வாறு கூறுவீர். குள்ள மனிதர்களின் அட்டகாசத்தால் மக்கள் பீதிக்குள்ளான போது, எத்தனை நாள்கள் இரவுவேளைகளில் நான் இங்கு நேரில் வந்து மக்களுடன் ஆராய்துள்ளேன்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மாகாண சபை உறுப்பினர் சயந்தனிடம் கேட்டார்.

“உங்களுடைய பத்திரிகையில்தான் அவ்வாறான செய்தி வந்தது. ஏனைய பத்திரிகைகள் அவ்வாறு செய்தி வெளியிடவில்லை. தொழில் போட்டியில் இவ்வாறான செய்தியைப் போடுகின்றீர்கள் என்றுதான் நான் நினைத்தேன்” என்று மாகாண சபை உறுப்பினர் சயந்தன் பதிலளித்தார்.

“உமக்கும் சுமந்திரனுக்கும் எனது பத்திரிகையைத் தாக்குவதுதான் வேலை. அதில் என்ன பிழை வருகிறது என்பதைப் பார்த்து விமர்சிப்பதே இருவரின் வேலையாக உள்ளது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கடிந்துகொண்டார்.

“எங்கள் இருவரையும் இலக்கு வைப்பதைதான் நீங்களும் செய்கிறீர்கள். தகுந்த நேரத்தில் பதில் தருவோம்” என்று சயந்தன் கூற சரவணபவன் அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றார்.

குள்ளர்களின் பிரச்சினை பிரச்சினையை தீர்க்க வந்துவிட்டு, குள்ளர்களாக தமக்குள் பிரச்சினை பட்டு போகின்றனர் என அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.