அழகிரியின் அதிரடிப் பேச்சு! திமுகாவுக்குள் திருப்பம்! ஒரே பார்வையில்!

0

அடுத்தகட்ட ஆலோசனையில் அழகிரி! – புதிய கட்சி உதயமாகுமா?

சென்னையில் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் அழகிரி. ‘ கட்சிக்குள் இணைவது குறித்து தி.மு.க தலைமை உரிய முடிவெடுக்கும் என அவர் நம்புகிறார். அப்படி எந்த முடிவும் எடுக்கப்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிப்பார்’ என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

சென்னை, மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மாலை வைத்த கையோடு, ஸ்டாலினுக்கு எதிராகப் பேட்டி அளித்தார் அழகிரி. அவரது கருத்துக்குப் பதில் அளித்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், ‘நாங்கள் ஒற்றுமையாகவும் கட்டுக்கோப்பாகவும் இருக்கிறோம்’ என்றார். மெரினாவில் இருந்து நேராக கோபாலபுரம் சென்ற அழகிரி, அங்கு தயாளு அம்மாளைச் சந்தித்துவிட்டு புறப்பட்டார். இதன்பிறகு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நெருங்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து நம்மிடம் பேசும் அழகிரி தரப்பினர், ‘அனைவரையும் அமைதியாக இருக்கும்படி அழகிரி தெரிவித்துள்ளார். கருணாநிதி உயிரோடு இருந்த சமயத்திலேயே அழகிரியை நீக்கிவிட்டதாகத் தி.மு.க.வினர் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் கோபாலபுரத்தில் என்ன நடந்தது என்று தெரியாது. எதற்காக அழகிரி அமைதியாக இருந்தார் என்ற காரணமும் புரியாது. எத்தனையோ இக்கட்டான நேரங்களில் தி.மு.க.வை சிறப்பாக வழிநடத்தி வளர்ச்சியின் பாதையில் அழைத்துச் சென்றவர் கருணாநிதி. ஆனால், அவரின் மறைவுக்குப்பிறகும் தி.மு.க.வை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் அழகிரியின் நோக்கம். தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவுக்குப் பிறகு அடுத்தகட்ட நிலைப்பாட்டை எடுப்போம். தேவைப்பட்டால் கலைஞர் பெயரில் புதிய கட்சியைக்கூட தொடங்குவோம்” என்கின்றனர்.

`அழகிரியால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளட்டும்!’ – ஸ்டாலின் தீர்க்கம்

தி.மு.க தலைவர் கருணாநிதி சமாதியில் அழகிரி வெளிப்படுத்திய ஆதங்கம், இன்னொரு தர்மயுத்தத்துக்கு வழிவகுத்திருக்கிறது. ‘ கருணாநிதியால் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர் அழகிரி. அவரை மீண்டும் சேர்த்துக் கொண்டால், என்னுடைய தலைமைதான் கேள்விக்குள்ளாகும்’ என்கிறாராம் செயல் தலைவர் ஸ்டாலின்.

சென்னையில் நாளை தி.மு.கவின் அவசர செயற்குழு கூட்டம் நடக்க இருக்கிறது. கட்சியின் தலைவர் இறந்துவிட்டதால், அவருக்கு இரங்கல் தெரிவிக்கும்விதமாகவே இந்தக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க மாநிலம் முழுக்க இருந்து செயற்குழு உறுப்பினர்கள் வருகை தர இருக்கின்றனர். இதன்பிறகு கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவது குறித்து வரும் 1-ம் தேதிக்குள் அறிவிக்க இருக்கிறார் ஸ்டாலின். செயற்குழு தொடர்பான பணிகளில் அறிவாலய வட்டாரம் ஈடுபட்டு வரும் வேளையில், மெரினா சமாதிக்கு இன்று காலை வந்தார் அழகிரி. கருணாநிதி சமாதிக்கு மாலை போட்டுவிட்டு செய்தியாளர்களை சந்தித்தவர், ‘கலைஞரின் விசுவாசமிக்க உடன்பிறப்புகள் என்னுடன்தான் இருக்கின்றனர். என்னுடைய ஆதங்கத்தைத் தெரிவிக்கவே வந்தேன்’ என இரண்டே வரிகளில் பேட்டியை முடித்துவிட்டு கோபமான முகத்துடன் வெளியேறிவிட்டார்.

‘பொதுக்குழுவில் அழகிரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்’ என்றெல்லாம் பேசப்பட்டு வந்த நிலையில், ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி போர்க்கொடி உயர்த்தியிருப்பது குறித்து அறிவாலய நிர்வாகிகளிடம் பேசினோம். ” காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட நேரத்திலேயே, அழகிரியை உள்ளே கொண்டு வருவது குறித்து செல்வி உள்ளிட்டவர்கள் பேசி வந்தனர். அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தையே பலரும் முன்வைத்தனர். கருணாநிதி மறைவுக்குப் பிறகு, ‘கட்சியின் முக்கியமான மூன்று நாற்காலிகளான தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்றில் ஒன்றை எனக்கு ஒதுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை அழகிரி முன்வைத்தார். செல்வியும் அழகிரிக்கு ஆதரவாக இருந்தார். இதற்குப் பிரதான காரணம், ‘ ஸ்டாலினுக்குப் பிறகு கனிமொழி முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாது’ என்பதுதான். ஆனால், அழகிரியை உள்ளே சேர்ப்பதில் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் முட்டுக்கட்டையாக இருப்பதை அறிந்து கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். அவரது லிஸ்ட்டில் இருக்கும் முக்கியமானவர்கள், எ.வ.வேலு, பொன்முடி, நேரு, ராசா, கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்டோர். இவர்கள்தான் தன்னுடைய வருகைக்குத் தடையாக இருக்கிறார்கள் என்பது அழகிரியின் எண்ணம். மருத்துவமனையிலும் அழகிரியைப் பார்த்துதான், இந்த நிர்வாகிகள் ஒதுங்கிச் சென்றார்கள்.

இந்தச் சண்டைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தபோது, கனிமொழி தரப்பினரும் தங்கள் தரப்பின் பலத்தை எடுத்துச் சொல்லும் வேலையில் இறங்கினர். ‘ ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார் கனிமொழி. அவரால் தென்மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை வாங்க முடியும். மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் நலன் என பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். அவருக்குப் பொருளாளர் பதவியைக் கொடுத்தால் மிகுந்த விசுவாசமாகச் செயல்படுவார்’ என்றெல்லாம் பேசத் தொடங்கினர். ‘அழகிரிக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். தென்மாவட்டத்துக்கு யாராவது ஒருவர் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால், 1977 தேர்தலில் கிடைத்த படுதோல்வியை சந்திக்க நேரிடும். அழகிரியைச் சேர்த்தால், கட்சி நிர்வாகிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவார். அதிகாரத்தில் அவர் வைத்ததுதான் சட்டம் என்றாகிவிடும். அழகிரியை ஒரேயடியாக ஓரம்கட்டிவிட்டால், கட்சியை எப்படியாவது நிலைநாட்டிவிடலாம்’ எனவும் கட்சியின் சீனியர்கள் பேசத் தொடங்கினர்.

இதையெல்லாம் கவனித்த செயல் தலைவர் ஸ்டாலின், ‘அவர்(அழகிரி) ஒரு போட்டியாளர் அல்ல. என்னுடைய குடும்பம்தான் என நான் எப்போதும் நினைக்கவில்லை. கலைஞரால் நீக்கப்பட்டவர் அழகிரி. அவரை மீண்டும் சேர்ப்பதால் என்னுடைய தலைமைதான் கேள்விக்குறியாகும். அவரைச் சேர்ப்பதால் எந்தவித பயனும் இல்லை. வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்துவதா..அல்லது இந்தப் பஞ்சாயத்தைப் பார்ப்பதா.. அழகிரி ஒன்றும் தவிர்க்க முடியாத சக்தி அல்ல. அவரால் செய்ய முடிந்ததைப் பார்த்துக் கொள்ளட்டும். எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்ற ரீதியில் தன் மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறாராம். அதாவது, ‘தன்னுடைய தலைமையை நிரூபிக்கும் வகையில் ஒரு வெற்றியைக் கொடுத்துவிட்டு, அழகிரி விவகாரத்தைப் பார்த்துக் கொள்ளலாம்’ என்பதுதான் அவருடைய மனநிலையாக இருக்கிறது. அதனால்தான், கருணாநிதி இறப்புக்குப் பிறகு ஓரிரு நாள்கள் மௌனமாக இருந்தவர், கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடைய முடிவைத் தெளிவாகக் கூறிவிட்டார். இதனை அழகிரி தரப்பினர் எதிர்பார்க்கவில்லை” என்றார் விரிவாக.

சென்னை ரெஸிடென்சி ஓட்டலில் தங்கியிருக்கும் அழகிரி, நேற்று தன்னுடைய ஆதரவாளர்களிடம் இதுபற்றிப் பேசியவர், ‘கட்சிக்குள் என்னை சேர்க்காதது குறித்த ஆதங்கத்தைத் தலைவரிடமே சொல்லிவிட்டு வருகிறேன்’ எனக் கோபமான குரலில் பேசியிருக்கிறார். “நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணன் வேலையைக் காட்டுவார். செயல் தலைவர் செயல்படாத தலைவர் என அவர் பேசிவந்தார். அதனை நிரூபிக்கும் வகையில் இந்தத் தேர்தலை அவர் பயன்படுத்திக் கொள்வார். குடும்பத்தினர் அவ்வளவு கூறியும், அண்ணனுக்கு எதிராக ஒரு குரூப் வேலை பார்த்து வருகிறது. அவர்களையும் நேரம் வரும்போது அவர் கவனித்துக் கொள்வார்” என்கின்றனர் அழகிரி ஆதரவாளர்கள்.

`அழகிரியை நீக்கிய முடிவில் உறுதியாக இருந்தார் கருணாநிதி!’ – ஸ்டாலினுக்கு விளக்கிய பேராசிரியர்

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார் மு.க.அழகிரி. ‘தலைவர் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்வது நல்லதல்ல. அவரைச் சேர்க்காமல் இருப்பதே நல்லது’ என ஸ்டாலினிடம் விளக்கியிருக்கிறாராம் பேராசிரியர் அன்பழகன்.

சென்னை, மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு இன்று காலை வந்த மு.க.அழகிரி, ‘கருணாநிதியின் விசுவாசமிக்க தொண்டர்கள் என் பக்கம்தான் உள்ளனர்’ எனக் கூறி அறிவாலயத்தை அதிரவைத்துவிட்டுச் சென்றார். அவரது இரண்டு வரி பேட்டி, குடும்பத்துக்குள் பலத்த விவாதமாகியிருக்கிறது. கருணாநிதி மறைவுக்குப் பிறகு, யார் யாருக்குப் பதவி கொடுக்க வேண்டும் என்பது குறித்து குடும்ப உறவுகளுக்குள் கருத்து மோதல் நடந்து வருகிறது. நாளை நடக்க இருக்கும் செயற்குழுவுக்குப் பிறகு, பொதுக்குழுவுக்கான தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. அதில், தி.மு.கவின் அதிகாரபூர்வ தலைவராகப் பொறுப்பேற்க இருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதில், அழகிரியின் ரீ-என்ட்ரி குறித்து குடும்பத்தினர் பலரும் வற்புறுத்தி வந்ததால், இதுகுறித்து பொதுச் செயலாளர் அன்பழகனுடன் விரிவாக விவாதித்தார் ஸ்டாலின். கட்சியின் நன்மை கருதி சில கருத்துகளை தெரிவித்திருக்கிறார் பேராசிரியர்.

அன்பழகன்அவர் பேசும்போது, ‘அழகிரியை இரண்டு முறை கட்சியை விட்டே நீக்கினார் தலைவர். மீண்டும் தலைவரே அவரைச் சேர்த்திருந்தால் பரவாயில்லை. கட்சியைவிட்டு அவரை நீக்கிய பிறகு, அந்த விவகாரத்தில் தலைவர் உறுதியாக இருந்தார். 2014-ம் ஆண்டு இரண்டாம் முறை அவரை நீக்கிய பின்னரும், அடுத்த மூன்று ஆண்டுகள் தலைவர் ஆக்டிவ்வாக இருந்தார். அப்போதெல்லாம் அழகிரியைச் சேர்ப்பது குறித்து அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இப்போது ஏதோ அழுத்தம் காரணமாக, அழகிரியை மீண்டும் கட்சிக்குள் சேர்த்தால் தலைவரின் முடிவையே மறுபரிசீலனை செய்வதுபோல ஆகிவிடும். அதனால்தான் அந்தக் காரியத்தை நாம் செய்யக் கூடாது. எனக்கு அதில் உடன்பாடு இல்லை’ என உறுதியாகக் கூறிவிட்டார். இந்தக் கருத்தை ஸ்டாலினும் ஏற்றுக்கொண்டார்.

இதுகுறித்து ஸ்டாலினிடம் பேசிய சீனியர் நிர்வாகிகளும், ‘தி.மு.கவுக்குள் அவர் இல்லை. ஏதோ புரட்சி செய்கிறேன் என அவர் கிளம்பினாலும், தனியாகக் கட்சியையெல்லாம் தொடங்கி நடத்த முடியாது. மீண்டும் ஒரு தி.மு.கவை அவரால் உருவாக்க முடியாது. அவர் புதிய கட்சியைத் தொடங்கினாலும் அதற்கு எந்தவித வரவேற்பும் கிடைக்காது. அழகிரியை மீண்டும் சேர்த்தால், தென்மாவட்டத்தில் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. அவர் வந்தால், மதுரையில் மீண்டும் ஆட்டம் தொடங்கிவிடும். இதனால் தமிழகம் முழுக்க கழகத்துக்குத்தான் கெட்ட பெயர் கிடைக்கும். அவர் வந்தால் கிடைக்கும் லாபத்தைவிட, நஷ்டம்தான் அதிகம் எனக் கூறியுள்ளனர். அவர் பக்கம் இருந்த பலரும் நம் பக்கம் வந்துவிட்டனர். எனவே, பேராசிரியர் சொல்வதுதான் சரி” என்ற ரீதியில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

ஆனால், அழகிரி தரப்பினரோ, ” தென்மாவட்டத்தில் அழகிரி இருப்பது அனைத்து வகையிலும் தி.மு.க.வுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும். அவர் வந்துவிடக் கூடாது என்பதில் ஸ்டாலினைவிட, அவருடன் இருக்கும் சிலர் உறுதியாக இருக்கின்றனர். கட்சிக்குள் அழகிரி இல்லாவிட்டால், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கு நிச்சயம் பின்னடைவு ஏற்படும்” என்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.