இனியும் தமிழீழம் சாத்தியமா?’ – தலைவர் பிரபாகரன் அவர்களின் பதில் என்ன?!

0

காணும் பொழுதெல்லாம் உணர்வாளர்கள் எழுப்பும் கேள்வி, “ஈழம் இனியும் சாத்தியமா?’ தர்மத்தை சூது கௌவும், தர்மம் மறுபடியும் வெல்லும். ஈழம் வரும்.

கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் மக்கள் சமூகங்களையும் நாகரீக வளர்ச்சியையும் அதிகமாகப் பாதித்தவை போர்களும் நாடு பிடித்தல்களும்தான். வரலாற்றின் மிகப்பெரிய நாடுபிடித்தல், ஐரோப்பிய வெள்ளையர்கள் இன்று லத்தீன் அமெரிக்கா எனப்படும் தென் அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமித்து தம் ஆளுகையின் கீழ் கொண்டு வந்த நிகழ்வு. பூர்வகுடி திராவிடர்களுக்கும் ஐரோப்பிய வெள்ளையர்களுக்கு மிடையான முதல் சந்திப்பும் மோதலும் 1532-ம் ஆண்டு நவம்பர் 16-ம் நாள் இன்றைய பெரு நாட்டிலுள்ள காசமார்கா என்ற இடத்தில் நடந்தது.
தென் அமெரிக்காவில் திராவிடர்கள் வாழ்ந் தார்களா என நீங்கள் கேட்பது புரிகிறது. வெள்ளையர் வருமுன் அங்கு வாழ்ந்தவர்களும் ஆண்டவர் களும் நம்மைப் போன்ற நிறமும் சாயலும் கொண்ட வர்கள். மேற்கத்திய மானுடவியலார்கள் பொதுவாக அவர்களை “பூர்வகுடி இந்தியர்கள்’ என அடை மொழியிட்டுக் குறித்தார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் திராவிட இன குடும்பத்தின் குணாம்சங்கள் கொண்டவர்கள். நம்மைப் போன்ற நிறமும் உடலாம்சங்களுமுடையோர் தற்போது பிரேசில் நாட்டில் மட்டுமே சுமார் 30 சதம் இருக்கிறார்களாம். கால்பந்து கதாநாயகர்கள் ரொனால்டோ, ரொனால்டிக்ஞோ, பெலே ஆகியோரின் முகங்களைப் பார்த்தாலே நமக்கு இது புரியும்.

பிரேசில் நாட்டின் தென்பகுதியிலுள்ள புவாஸ்திகாசு என்ற அருவி அற்புதமானது. புவாஸ்திகாசு என்றால் தமிழில் “”கற்களும் கவிதை பாடும் இடம்” என்று அர்த்தமாம். நாமெல்லாம் சிலாகிக்கும் நயாகராவை விட நான்கு மடங்கேனும் பெரிய அருவி. நீள விரிவு மட்டுமே சுமார் மூன்றரை கி.மீ. இருக்கும். குற்றால நீர்வீழ்ச்சி மூன்றரை கி.மீ. நீளத்திற்கு விழுந்து கொண்டேயிருந்தால் எப்படியிருக்குமென கற்பனை செய்து பாருங்கள்?! ஆனால் எதையும் நன்றாக விற்கத் தெரிந்த வெள்ளையர்கள், நயாகராவை உலகின் பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சியாய் நிலைநிறுத்தி விட்டார்கள்.

இயற்கையோடிணைந்து அறமும் இறையுமாய் இசைபட வாழ்ந்த பூர்வகுடி மக்களை ஈவிரக்கமின்றி கொன்று அழித்துவிட்டு “”கிறிஸ்டபர் கொலம் பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார்” என்று கதை எழுதிய பயங்கரவாதத்தின் மொத்த விலை வர்த்தகர்கள்தானே இந்த வெள்ளையர்கள். நம்மில் பலர் இன்றுவரை கொலம்பஸ் சென்று “கண்டுபிடிப்பதற்கு’ முன் அமெரிக்கா வில் மனித சமூகங்கள் வாழவில்லை என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஐரோப்பிய வெள்ளையர்கள் ஆக்கிரமிப்பதற்கு முன் அமெரிக்காவை ஆண்டவர்கள் “பூர்வகுடி இந்தியர்கள்’, “செவ்விந்தியர்கள்’ என அறியப்படும் திராவிட இனத் தொடர்புடைய மக்கள் என்பது எத்தனைபேருக்குத் தெரியும்? அறிவு மோசடியில் முதலிடம் பெறுவது மதவாதிகளென்றால் அடுத்த இடத்தில் நிற்பது வரலாற்று ஆசிரியர்கள், எழுத்தாளர்கள்.

இந்தியாவில் இடைநிலை, உயர்நிலை பள்ளிக் கல்விக்கான பாடங்கள் எழுதுவோர்கூட இந்த மோசடிக்கு விதிவிலக்கல்ல. முதற்பாடம் “”ஆரியர் வருகை” என்ற தலைப்பிலும் அடுத்த பாடம் “”முகலாயர் படையெடுப்பு” என்றும் இருக்கும். ஆரியர், முகலாயர் இருவருமே கைபர் போலன் கணவாய் வழி நம் நிலம் வந்து ஆக்கிரமித்து வாழ்ந்தவர்கள். ஆனால் வரலாறு எழுதுகையில் ஆரியர்கள் “”வந்தவர்கள்” என்றும் முகலாயர்கள் “”படையெடுத்தவர்கள்” என்றும் படம் விரியும். நுட்பம் புரிகிறதா, உங்களுக்கு? ஆரியர்கள் சாதுக்கள், முகலாயர் சண்டியர்கள் என்ற கற்பிதம் எப்படி ஆரம்பக் கல்வியிலேயே விதைக்கப்படுகிறது.

1532-ம் ஆண்டு நவம்பர் 16-ம் நாள் பெருநாட்டு காசமார்காவில் பூர்வகுடி “”இன்கா” இன பேரரசன் அத்தகுவல்ப்பாவின் படைகளும் தூய உரோமாபுரிப் பேரரசரும், ஸ்பெயின் நாட்டு மன்னனுமான ஐந்தாம் சார்லஸின் தளபதி பிரான்சிஸ்கோ பிசாரோ தலைமையிலான படைகளும் சந்திக்கின்றன. அத்தகுவல்ப்பாவின் படையணிகளில் 80,000 வீரர்கள், அவர்களோடு பின்னணிப் படையினர், தங்கு தடையற்ற விநியோக ஏற்பாடுகள் மற்றும் வலுவான கோட்டை கொத்தளங்கள். எதிர்பக்கம் பிசாரோவின் படையோ மொத்தம் 168 பேர். சொந்த நாட்டிலிருந்து 1000 மைல் கடல் கடந்து பின்புல உதவிகள் எதுவுமே சாத்தியமில்லாத போர்க்களத்தில் நின்றவர்கள். ஆனால் சரித்திரத்தின் மிகத்தீர்க்கமான திருப்புமுனைகளில் ஒன்றான 1532, நவம்பர் 16-ம் நாளின் பதிவு என்னவென்றால் பிசாரோவின் 168 பேர் படை, அத்தகுவல்ப்பாவின் 80,000 பேர்கொண்ட பெரும் படையணியை தோற்கடித்து வெற்றிவாகை சூடியதென்பதாகும்.

“இன்கா’ இன பெரும்படையின் தோல் விக்கும் ஸ்பெயின் நாட்டு சிறு குழுவின் வெற்றிக்குமான காரணங்களை ஆய்வதென்றால் அதற்கு மட்டுமே இருபது “மறக்க முடியுமா’ இதழ்கள் தேவைப்படும். மிக முக்கியமான காரணங்கள் நான்கு. ஸ்பானியர் களிடம் இரும்பு ஆயுதங்கள் இருந்தன. இன்கர்களோ மரம், கல் சார் ஆயுதங்களையே கொண்டிருந்தனர். இரண்டு, ஸ்பானியர்களிடம் குதிரைகள் இருந்தன; ஆதலால் வேகம் சாத்தியப்பட்டது. இன்கர்களோ யானைகள் வைத்திருந்தனர்; குதிரைகள் இல்லை. மூன்று முக்கியமானது. ஸ்பானியர்கள் யுத்தகளத்திற்கான திறன்மிகு “தகவல் பரிமாற்ற முறையை கொண்டிருந்தனர். -இன்கர்களிடம் அது இருக்க வில்லை. இறுதியாக இன்கர்படை அத்தகுவல்ப் பாவை கடவுளாகக் கருதியது. ஸ்பானியர்கள் முதலில் வீழ்த்தியது கடவுளை. கடவுளே வீழ்ந்துவிட்டா ரென்றால் ஏனையோர் நிற்க முடியுமோ? சிதறுண்டார்கள்.
சுருக்கமான செய்தி இதுதான். புதுமை-நவீனத்துவங்களோடு ஈடுகொடுத்து, ஜனநாயக நம்பிக்கைகளுடன், திறமான தகவல்-செய்தி உத்திகளோடு வேகமும் காட்டி இயங்கினால் 80,000 பேர் கொண்ட படையை அவர்கள் நிலத்திலேயே 168 பேரால் வீழ்த்த முடியும், முடிந்தது. 16-ம் நூற்றாண்டில் பெருநாட்டு காசமார்கா-வில் முடிந்ததென்றால் 21-ம் நூற்றாண்டில் ஏன் கரிப்பட்ட முறிப்பிலும், முல்லைத்தீவிலும் மீண்டும் நடக்கக்கூடாது? நடக்கும். தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு அத்தெளிவு இருந்தது.

“”எனது காலத்திலேயே ஈழம் கைகூடும் என்ற நினைப்பில் நான் போராடவில்லை. எனக்குப் பின்னரும் நாற்பது ஆண்டுகள் இளைஞர்கள் போராடி இயங்குவதற்கான ஒழுங்குகளையும் ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறேன்”என்றார்.

“”தமிழ் ஈழத்திற்கு ஆதரவான உலகப் பொதுக்கருத்து உருவாகுமென நீங்கள் நம்புகிறீர்களா?” என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு.

“”நான் மீண்டும் மீண்டும் ஒன்றை வலியுறுத்துகிறேன். ஒருபோதும் போருக்கு புலிகள் காரணமாய் இருந்ததில்லை. யுத்தம் எம்மீதும் எமது மக்கள் மீதும் திணிக்கப்பட்டது. நாங்களோ, எமது மக்களோ யுத்த வெறி கொண்டவர்களல்ல. சிங்களப் பேரினவாதம்தான் யுத்த வெறிகொண்டு எம் மக்களை நசுக்க வருகிறது. இதனை உலகம் ஒருநாள் புரிந்துகொள்ளும்” என்றார்.

“”நேரில் பார்க்கவும் பேசவும் அப்படியொரு சாதுவாகத் தெரிகிறீர்கள். உலகமோ உங்களைப் பற்றி கடுமையான பார்வை கொண்டிருக்கிறது. உங்களது உண்மையான ஆளுமையை உலகிற்கு எடுத்துக்கூறும் விளம்பர முயற்சிகளை ஆங்கில ஊடகங்கள் வழி அதற்குரிய நிறுவனங்களைப் பயன்படுத்தி செய்யக்கூடாதா?” என்ற கேள்விக்கு. தலைவர் பிரபாகரன் அவர்கள் தந்த பதில் காலங்களையெல்லாம் கடந்து நிற்கும். இதுதான் அவரது பதில்:

“”வியாபாரிகளுக்குத்தான் விளம்பரம் வேண்டும். வீரனுக்கல்ல”.

இதனை எழுதுகையில் எழுதுகோலும் தாளும்கூட என்னோடிணைந்து சிலிர்ப்பதாய் உணர்கிறேன். என்ன தெளிவு. என்ன கூர்மை.

“”வியாபாரிக்குத்தான் விளம்பரம் வேண்டும், வீரனுக்கல்ல. தொடர்ந்து கூறினார் : “”எம்மைப் பற்றின தவறான புரிந்துமைகள் நிச்சயம் ஒருநாள் மாறும். ஏனென்றால் தன் பேரினவாத வெறியிலிருந்து சிங்களம் ஒருபோதும் மாறப்போவதில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கொடூர முகத்தை உலகம் நிச்சயம் புரிந்துகொள்கிற காலம் வரும்” என்றார்.

“”குறைந்த அளவு படையணிகளைக் கொண்டு எப்படி பெரும் சிங்களப்படைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றீர்கள்?” என்ற கேள்விக்கு.

“”தொடக்கத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன். இது ஆயுதங்களுக்கும் ஆயுதங்களுக்கும் இடையே நடக்கிற மோதல் அல்ல. தமிழரை அடக்கி அழிக்க நினைக்கிற சிங்களப் பேரினவாதத்திற்கும் அடிமை விலங்குகளை உடைத்து விடுதலை பெறத்துடிக்கும் ஓர் இனத்தின் மன எழுச்சிக்கும் இடையே நடக்கிற போர் இது. ஆயுதங்களுக்கிடையேயான போரென்றால் எப்போதோ எங்கள் கதை முடிந்திருக்கும்.

எதிர்காலத்தில் மீண்டும் போர் தொடங்கி ஆயுதப்போராட்டத்தில் நாங்கள் பின்னடைவு கண்டாலும் கூட, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழரின் வரலாற்றில் அபூர்வமாகத் தொடங்கிவைத்த மன எழுச்சி அடங்காது.
அந்த மன எழுச்சியை எந்தப் படைகளாலும் அடக்கவோ அழிக்கவோ முடியாது. அந்த நம்பிக்கையில் திடமாக நின்றுதான் நான் தமிழீழம் நிச்சயம் ஒருநாள் மலரும் எனவும் நம்புகிறேன்” என்றார் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

Leave A Reply

Your email address will not be published.