உலகிலேயே அதிக சிறுவர்கள், பெண்கள் கொல்லப்பட்ட செஞ்சோலைப் படுகொலை!

0

செஞ்சோலை பள்ளி மாணவர் இனப் படுகொலையை தமிழினம் மறந்துவிட முடியாது. அப் படுகொலை இடம்பெற்ற கனத்துப்போன அந்த நாள் இன்னும் அதிர்ச்சியுடன் நினைவில் நிற்கிறது. 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வடக்கில் போர் தொடங்கியது. கிழக்கு மாகாணத்தில் தொடங்கப்பட்ட போரால் அங்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். வடக்கில் போர்ச் சூழல் ஏற்பட்டு ஓர், இரு நாட்கள் தான் ஆகியிருந்தன. யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டு, யாழ்ப்பாணமட் முழு நேர ஊரடங்கில் வைக்கப்பட்டிருந்த நாட்கள் அவை.

அப்படி ஒரு தருணத்தில்தான் வன்னியில் செஞ்சோலைப்படு கொலை நிகழ்த்தப்பட்டது. ஒருவரல்ல, இருவரல்ல, 53 மாணவிகள் கொல்லப்பட்டார்கள். ஈழத்து சிறுவர்களின் வாழ்க்கையை விமானத்தைப்போல ஒரு யுத்த தளவாடம் பாதித்ததில்லை. துப்பாக்கிச் சன்னங்களை எண்ணி விளையாடுவதும், வெற்று எறிகணைகளை இருக்கையாக பாவித்துக் கொள்வதும் போர்க்காலத்தின் வாழ்க்கையாகிப் போனது. ஆனால் விமானங்கள் அப்படியல்ல. விமானங்களின் ஏற்படுத்திய பதகளிப்பும் பாதிப்பும் ஈழக் குழந்தைகள், சிறுவர்களின் வாழ்க்கையை இருண்ட பதுங்கு குழிக்குள் தள்ளியது.

விமானங்கள் நாளுக்கு நாள் இனக் கொலை செய்யும் உத்திகளை மாற்றிக் கொண்டிருந்தன. புக்காரா, சுப்பர் சொனிக், கிபீர் என்று அதன் பெயர்களை போர்க்கால சிறுவர்கள் மறந்துவிட மாட்டார்கள். விமானங்கள் எங்களை வானத்திடமிருந்து பிரித்தன. விமானங்கள் எங்களை பறவைகளிடமிருந்து பிரித்தன. விமானங்களால் நாங்கள் வானத்தை பார்க்க அஞ்சினோம். விமானங்களால் நாங்கள் பறவைகளை கண்டு அஞ்சினோம். அப்படி ஒரு யுகத்திற்கும் வாழ்க்கைகும் ஈழச் சிறுவர்களை தள்ளியது விமானங்கள்.

ஈழத்தில் இடம்பெற்ற முப்பதாண்டு போரில் ஆலயங்கள்மீதும் பாடசாலைகள்மீதும், அகதிமுகாங்கள்மீதும், மக்களின் வீடுகள் மீதும் வைத்தியசாலைகள்மீதும் விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. நாகர் கோவில் மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் 19955ஆம் ஆண்டில் நடந்த விமானத் தாக்குதலில் 39 மாணவர்கள் பலியாகினார்கள். அதன் பின்னர், அதிக எண்ணிக்கையான மாணவிகள், 53பேர் படுகொலை செய்யப்பட்டனர் செஞ்சோலையில். உலகிலேயே அதிக பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு இதுவாகும். இத்தகைய பெருமையைத்தான் இலங்கை அரசாங்கம் தனதாக்கியுள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்கள் இவர்கள் என்பதையும் இவர்கள் அனர்த்த முகாமைத்துவ தலைமைத்துவப் பயிற்சிக்காக சென்றமையும் கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் உறுதி செய்தது. அத்துடன் அதற்கான முறையான பதிவுகள், கடிதங்கள் யாவும் பேணப்பட்டிருந்தன. போரில் கொல்லப்பட்டவர்கள் மாணவர்கள் என்பதையும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுதி செய்தது. ஆனால் இலங்கை அரசு, கொல்லப்பட்டவர்களை விடுதலைப் புலிகள் என்றது. தமக்கு 100வீதம் திருப்தி தருகின்ற தாக்குதல் இது என்று அப்போதைய இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க கூறினார்.

இந்த தாக்குதல் இடம்பெற்ற சமயத்தில் வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தபோது, அங்குள்ள பத்திரிகையாளர் ஒருவர் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்து இப்படுகொலை குறித்து கேள்வி எழுப்பினார். செஞ்சோலையில் 50க்கு மேற்ப்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது குறித்து என்ன சொல்லப் போகிறீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். மகிந்த ராஜபக்ச புன்னகையுடன் பதில் அளித்தார். அவர்கள் புலிகள். நாங்கள் பயங்கரவாதிகளை தான் கொன்றிருக்கிறோம். இந்த தாக்குதல் சரியானது. இந்த தாக்குதல் எனக்கு 100வீதம் திருப்தி தருகிறது என்றார்.

விடுதலைப் புலிகளின் நிலைகள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளின் குழந்தைப் போராளிகள் என்றும் வாய் கூசாமல் கூறினார் அன்றைய இலங்கை அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல. அப்பாவி மக்கள்மீது நடாத்தப்படும் அத்தனை தாக்குதல்களையும் அப்பாவி மக்கள்மீது எறியப்படும் அத்தனை குண்டு வீச்சுக்களையும் இவர் அவ்வாறே கூறினார். இதனையண்டிய நாட்களில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் இருவர் வீட்டில் இருந்தபோது குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அவர்களையும் விடுதலைப் புலிகள் என்றே சிங்கள அரசு கூறியது.

நவாலி தேவலயத்திலும் நாகர்கோவில் பாடசாலையிலும் நந்தாவில் அம்மன் கோவிலிலும் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் என்றால் இவர்களும் விடுதலைப் புலிகளே. அங்கு கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்றால் இவர்களும் பயங்கரவாதிகளே. செஞ்சோலைப்படுகொலை தமிழ் மக்களின் வரலாற்றில் தமிழ் மாணவர்களின் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத ஒரு வடுவாக செஞ்சோலைப்படுகொலை நிலைத்துவிட்டது. ஒரு பெரும் கல்விச் சமூகத்தை இழந்திருக்கிறோம் என்ற பொறுக்க முடியாத பெருந்துயரை அரசு தமிழருக்கு கையளித்தது.

மு/வித்தியானந்தா கல்லூரி மாணவிகள்

நிவேதனா தமிழ்வாசன்,அனோயா சுந்தரம்,தயானி கிரிதரன்,புவனேஸ்வரி புவனசேகரம்

மு/.குமுளமுனை மகாவித்தியாலைய மாணவிகள்

நிந்துயா நல்லபிள்ளை,ராஜிதா வீரசிங்கம்,கெளசிகா உதயகுமார்,சுகிர்தா சாந்தகுமார்,தாட்சாயணி விவேகானந்தம்

மு /புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவிகள்

பென்சிடியூலா மகாலிங்கம்,தர்சிகா தம்பிராசா,சுதர்சினி துரைலிங்கம்,

மு/உடையார்கட்டு மகாவித்தியாலைய மாணவிகள்

கோகிலா நாகலிங்கம்,மதனி பாலகிருஸ்ணன்,விதுசா கனகலிங்கம்,நிருபா கனகலிங்கம்,அருட்செல்வி முருகையா,இந்திரா முத்தையா,கோகிலா சிவமாயஜெயம்,சாந்தகுமாரி நவரட்ணம்,கார்த்திகாயினி சிவமூர்த்தி,சத்தியகலா சந்தானம்,தபேந்தினி சண்முகராஜா

மு/விசுவமடு மகாவித்தியாலைய மாணவிகள்

நந்தினி கணபதிப்பிள்ளை,யசோதினி அருளம்பலம்,ரம்ஜா ரவீந்திரராசா,தீபா நாகலிங்கம்,தீபா தம்பிராசா,நிரந்ச்சலா திருநாவுக்கரசு,நிசாந்தினி நகுலேஸ்வரன்,தயாளினி தம்பிமுத்து,கேமாலா தர்மகுலசிங்கம்,சிந்துஜா விஜயகுமார்,ஜெசீனா சந்திரன்

மு /முல்லைத்தீவு மகாவித்தியாலைய மாணவிகள்

கம்சனா ராஜ்மோகன்,கலைப்பிரியா பத்மநாதன்,தனுஷா தணிகாசலம்,சுகந்தினி தம்பிராசா,வத்சலாமேரி சிவசுப்பிரமணியம்,திவ்யா சிவானந்தம்,பகீரஜி தனபாலசிங்கம்,கெலன்சுதாஜினி மார்க்குப்பிள்ளை

கிளி/தர்மபுரம் மகாவித்தியாலைய மாணவிகள்

நிவாகினி நீலையனார்,

மங்களேஸ்வரி வரதராஜா,மகிழ்வதனி இராசேந்திரம்,

மு /செம்மலை மகாவித்தியாலைய மாணவிகள்

கிருத்திகா வைரவமூர்த்தி,திசானி துரைசிங்கம்,வசந்தராணி மகாலிங்கம்,நிவேதிகா சந்திரமோகன்

மு /ஒட்டுசுட்டான் மகாவித்தியாலைய மாணவி

நிலோஜினி செல்வம்

கிளி /முருகானந்தா மகாவித்தியாலய மாணவிகள்

பிருந்தா தர்மராஜா,சர்மினி தேவராசா

கிளி /பிரமந்தனாறு மகாவித்தியாலய மாணவி

லிகிதா குபேந்திரசிங்கம்

செஞ்சோலை சிவப்புசோலையானது.

மரங்களின் நிழல்கள் உடைந்து
வேரோடுசிதறிக்கிடந்தன
எனது சகோதரிகள்
செத்து கும்பல்கும்பலாக கிடந்தார்கள்
எனது ஓருகையும் ஒருகாலும்
சிதறி எங்கோ போயிற்று
என்னை ஒரு பெண்போராளி
தூக்கிப்போகிறாள்.

நமது வெள்ளைச்சீருடைகள்
குருதியில் தோய்ந்திருந்தன
வெண்கட்டிகளும்
கரும்பலகைகளும்
ஆசிரியர்களின்முன்
அழுதபடி நின்றன.
வெள்ளைக்காரர்கள் வந்தார்கள்
எங்கள் மொழியை புரியாது நின்றார்கள்
அவர்கள் போக பின்னால்
ஆச்சரியமற்றுக்கொண்டிருந்தது.

தீபச்செல்வன்

நன்றி: குளோபல் தமிழ் செய்திகள்

Leave A Reply

Your email address will not be published.