எது நம்மை நலிவடைய வைக்கிறது? விக்கி விளக்கம்!

0

“வித்துவச் செருக்கும், தேவையற்ற பிளவுகளும், அகந்தையுமே எம்மை நலிவடையச் செய்திருக்கின்றன”

இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே, கௌரவ வடமாகாணசபை உறுப்பினர்களே, வவுனியா நகர பிதா அவர்களே, அரசாங்க அதிபர் அவர்களே, வவுனியா பிரதேச செயலர் அவர்களே, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களே, வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் அவர்களே, பொது முகாமையாளர் அவர்களே, தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க உறுப்பினர்களே, சகோதர சகோதரிகளே!

இன்றைய தினம் வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தமது 20ம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தை வெகுவிமரிசையாக முன்னெடுக்கின்ற இத் தருணத்தில் உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

இலங்கையின் வீதிப் போக்குவரத்துச் சேவைகளுக்கான ஏக போக உரிமைகளை இலங்கை போக்குவரத்துச் சபை தன்னகத்தே கொண்டிருந்த போதிலும், பொதுமக்களின் நாளாந்த அதிகரிக்கப்பட்ட போக்குவரத்துச் சேவைகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் தனியார் போக்குவரத்துச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் வடமாகாணத்தில் தற்போது ஏறத்தாழ ஆயிரம் பிரத்தியேகப் பேரூந்து வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் மாவட்ட ரீதியாக சங்கங்களை அமைத்து இலங்கை போக்குவரத்துச் சபையுடன் இணைந்த நேரக்கட்டுப்பாடுகளுக்கு அமைய சேவைகளை ஆற்றிவருவது போற்றுதற்குரியது.

பொதுமக்களுடன் தொடர்புடைய போக்குவரத்துச் சேவையை மிக நிதானமாக ஒழுக்கக் கட்டுப்பாடுகளுடன் விபத்துக்கள் பல ஏற்படாத வகையில் நீங்கள் சிறப்பாக முன்னெடுத்து வருவதை இத் தருணத்தில் பாராட்டுகின்றேன்.

சில நெருக்கடியான காலங்களில் வேண்டுமென்றே எம் மீது சிலர் அவதூறுகளைப் பரப்ப முயன்றபோதும் அத் தருணத்தில் வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், யாழ்ப்பாணம் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் என 05 மாவட்டங்களிலும் உள்ள தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கங்கள் தமது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கிப் பொதுமக்களுக்கு எதுவித அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் போக்குவரத்துச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வந்தமை நன்றியுடன் நினைவு கூரப்படுகின்றன.

பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்க வேண்டும் என்ற சேவை மனப்பாங்கில் செயற்படும் நோக்கில் வருடா வருடம் புதிய நிர்வாகங்கள் தெரிவு செய்யப்பட்டு சேவை மனப்பாங்குடனான ஒரு குழுவாக நீங்கள் செயற்பட்டு வருவது தனியார் துறைகளுக்கான ஒரு எடுத்துக்காட்டாக அமைகின்றது.

மக்களின் உணர்வுபூர்வமான நினைவு தினங்களிலும் அஞ்சலிக் கடமைகளை நிறைவேற்றக்கூடிய பகுதிகளுக்கான போக்குவரத்துச் சேவைகளுக்காக நாம் உங்களை நாடியபோது எதுவித மறுப்புமின்றி முழு மனத்துடன் இலவசச் சேவைகளை ஆற்றியது மட்டுமன்றி எமது எதிர்பார்ப்பைவிட ஒருபடி விஞ்சி உங்கள் சேவைகளை முன்னின்று வழங்கியமை பொதுமக்கள் பால் நீங்கள் கொண்டுள்ள கரிசனையையும் அன்பையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தில் அண்ணளவாக 110 உரிமையாளர்கள் வரையில் இணைந்து செயற்படுவதாக அறிகின்றேன். இச் சங்கத்தில் பணிபுரிகின்ற பணியாளர்களுக்கான சம்பளங்கள் முறையாக வழங்கப்படுவது மட்டுமன்றி அவர்களுக்கான நுPகுஇ நுவுகு கொடுப்பனவுகளும் மற்றும் சங்கத்திற்கான மாதாந்தப் பொதுச் செலவுகளும் ஈடுசெய்யப்பட்டு வருவதாக அறியத்தரப்பட்டுள்ளன. இவ்வாறான ஒற்றுமையும் கூட்டுப்பொறுப்பும் பரோபகார சிந்தனைகளும் ஒருமித்த தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஆற்றலும் எமது மக்களிடையே அரசியல் ரீதியாக இருந்திருக்குமேயாயின் எமது பிரச்சினைகள் என்றோ தீர்க்கப்பட்டிருப்பன.

எமது வித்துவச் செருக்கும் தேவையற்ற பிளவுகளும் தன்மானம் என்ற பெயரில் எழுந்த அகந்தையுமே எம்மைப் பல பிரிவுகளாக்கி நலிவடையச் செய்திருக்கின்றன.
தனியார் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் அரச போக்குவரத்துச் சேவைகள் ஆகியவற்றின் சேவைகளுக்கான நேர அட்டவணை 60:40 என்ற வகையில் தயாரிக்கப்பட்ட போதும் அது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாகாணங்களில் இவ்வாறான நேர அட்டவணைகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற போதும் எமது பகுதிகளில் இவை இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாமை வருத்தத்திற்குரியது. இவ் விடயம் தொடர்பாக அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட வடமாகாண போக்குவரத்து ஆணைக்குழு இவ் விடயங்களை சீர்தூக்கி ஆராய்ந்து பார்த்து இலங்கை போக்குவரத்துச் சபையுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தி ஒரு நல்ல முடிவிற்கு விரைவில் வருவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

தற்போதைய பஸ் வண்டிகளில் புறப்படும் இடம் சேரும் இடம் இரண்டு இடங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால் எங்கிருந்து புறப்பட்டு எங்கு செல்கின்றது என்பதை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள் என்னவென்று தெரியவில்லை. உதாரணமாக வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்கின்ற பஸ் வண்டியில் வவுனியா – யாழ்ப்பாணம் என்ற பெயர்ப் பலகை காணப்படும். மீண்டும் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு செல்கின்ற போதும் அதே பெயர்ப் பலகையான வவுனியா – யாழ்ப்பாணம் என்கிற பெயர்ப் பலகையே காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. இது மக்களுக்கு மயக்கத்தைத் தருவன. இது தொடர்பில் நீங்கள் சற்றுக் கவனம் எடுக்க வேண்டும்.

உங்கள் பஸ் வண்டிகளில் பயணிகளின் சௌகரியத்திற்காகவும், மகிழ்ச்சியான பயணத்திற்காகவும் சினிமாப் பாடல்களை ஒலிபரப்புவதும் சினிமாப் படங்களைக் காட்சிப்படுத்துவதும் வரவேற்கத்தக்கதே. ஆனால் இப் பாடல்கள் மக்களுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடிய அறிவு சார்ந்த பாடல்களாக அமைந்திருப்பதே பொதுவாக மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மாறாக இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச சிந்தனைகளைத் தூண்டக்கூடிய மற்றும் நவீனம் என்ற பெயரில் பாலியல் கலாச்சாரங்களையும் பாலியற் சிந்தனைகளையும் தூண்டக்கூடிய பாடல்களை ஒலிபரப்புவதை அனைத்து பஸ் உரிமையாளர் சங்கங்களும் ஒன்றாக இணைந்து தடுக்கலாம். அதே போன்று வாள்வெட்டு கலாசாரங்கள், ரவுடித்தனங்கள், சோம்பல் தன்மைகளைப் பிரதிபலிக்கும் படங்களைத் தவிர்த்து கருத்தாழம் மிக்க நகைச்சுவைகளுடன் கூடிய பல நல்ல படங்களைக் காட்சிப்படுத்துவதையே எமது மக்கள் விரும்புகின்றார்கள் என்பதைக் கூறி வைக்கின்றேன். படங்களையும் பாடல்களையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை பொறுப்புள்ளவர்களிடம் விட்டால் பேரூந்தில் பயணம் செய்பவர்கள் வெட்கப்படத்தேவையில்லை என்று கருதுகின்றேன். பேரூந்துகளில் பயணம் செய்யும் பலரின் கருத்தையே இங்கு நான் பிரதி பலிக்கின்றேன்.

உங்கள் சாரதிய ஒழுங்கும் மக்கள் பாதுகாப்பும் 100மூ உறுதிப்படுத்தப்பட வேண்டும். தற்போது நடைபெறுகின்ற ஒன்று இரண்டு விபத்துக்களைக் கூட இல்லாதொழிப்பதற்கு நீங்கள் பாடுபடவேண்டும். சுமார் 20-30 வருடங்களுக்கு முன்னர் இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் சிறந்த சாரதிகளாக இனங் காட்டப்பட்டிருந்தனர். ஆனால் இன்று அந்த நிலையில்லை. போட்டித் தன்மை காரணமாக வீதி ஒழுங்கு சைகைகள், சமிக்ஞைகள் ஆகியவற்றைப் புறக்கணித்து நினைத்தவாறே நிறுத்துவது, எடுத்த மாத்திரத்தில் இயக்குவது, பின்பார்வை கண்ணாடிகளை முறையாக உற்று நோக்காது இயக்குவது போன்ற பல குறைபாடுகள் எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறான குறைகளை நீக்க நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும். நவீன அரசியல் கலாசாரத்தின் கீழ் அரசியல் முன்னெடுப்புக்களைக் கொண்டு செல்வதற்கு உங்கள் போன்ற சங்கங்கள் பாவிக்கப்படுகின்றன. அரசின் சுமூக நிலையைக் குழப்புவதற்கு பொது அமைப்புக்கள், தொழிலாளர்கள் சங்கங்கள், பிரத்தியேக பஸ் சேவை நடாத்துனர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் தூண்டிவிடப்படுகின்றார்கள். இவ்வாறான கபட நாடகங்களுக்கு நீங்கள் பலிக்கடாக்களாகாமல் சுயமான சிந்தனையுடன் உண்மையானதும் அவசியமானதும் பொதுமக்களுக்கு நன்மை கிடைக்க கூடியதுமான முன்னேற்றகரமான செயற்பாடுகளில் நீங்கள் ஈடுபடுவீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. உங்கள் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க வவுனியாக் கிளை சிறப்புடன் செயலாற்ற அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து எனது உரையை இத்துடன் நிறைவு செய்கின்றேன்.
நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம்
20ம் ஆண்டு வருடாந்தப் பொதுக்கூட்டம்
றோயல் கார்டன், ஹொரவபொத்தான வீதி, வவுனியா
18.08.2018 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில்
பிரதம அதிதி உரை
குருர் ப்ரம்மா………………………….

Leave A Reply

Your email address will not be published.